Last Updated : 12 Jun, 2019 06:31 PM

 

Published : 12 Jun 2019 06:31 PM
Last Updated : 12 Jun 2019 06:31 PM

நடிகர் சங்கத்தில் ரொம்ப காலமாகவே பிரச்சினை இருக்கிறது: விஜய் சேதுபதி

நடிகர் சங்கத்தில் ரொம்ப காலமாகவே பிரச்சினை இருக்கிறது என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.

அருண் குமார் - விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ள படம் ‘சிந்துபாத்’. இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ராஜராஜன் மற்றும் ஷான் சுதர்சன் இணைந்து இப்படத்தைத் தயாரித்துள்ளனர்.

இந்தப் படம் ஜூன் 21-ம் தேதி வெளியாவதால் பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. இந்தச் சந்திப்பு முடிந்து விஜய் சேதுபதி கிளம்பும் போது, நடிகர் சங்கத் தேர்தல் தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு விஜய் சேதுபதி பதிலளிக்கையில், “ஒரே அணியில் ஒன்றாக இருந்துவிட்டு, பின்னால் பிரிவது காலம் காலமாக நடந்து வருகிறது. அது இயல்பு தான்.

நடிகர் சங்கத்தில் நல்லதே நடக்கும் என எதிர்பார்க்கிறேன். நான் ஒரு அணியினரிடம் பேசியிருக்கிறேன். அது எந்த அணி என்று சொல்ல மாட்டேன். அவர்கள் சொன்ன கருத்துகளைக் கேட்டிருக்கிறேன். அது நல்லபடியாக இருந்தது. நான் யார் சரி என்று நினைக்கிறேனோ, அவர்களுக்கு வாக்களிப்பேன்.

நடிகர் சங்கத்தில் ரொம்ப காலமாகவே பிரச்சினை இருக்கிறது. அது கொஞ்சம் கொஞ்சமாக தீர்ந்து வந்தால் சந்தோஷம் தான். சினிமா என்பது வளர்ந்திருக்கும் நடிகர்கள் கொஞ்ச பேரை மட்டுமே பார்க்கிறார்கள். ஆகவே, தலைவர்கள் மற்றும் மக்களிடம் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்.

சினிமா என்பது வெறும் 150 பேர் மட்டுமல்ல. இதில் நிறைய குடும்பங்கள் உள்ளன. தொழிலாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரது நலனுக்காகவும் சினிமா நல்லபடியாக இருக்க வேண்டும். போஸ்டரில் வேண்டுமானால் ஹீரோக்கள் முகம் பெரிதாக இருக்கலாம். ஆனால், நிறைய குடும்பங்கள் சேர்ந்தது தான் சினிமா” என்றார் விஜய் சேதுபதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x