Published : 27 Jun 2019 05:16 PM
Last Updated : 27 Jun 2019 05:16 PM
மலேசியாவில் ரப்பர் எஸ்டேட்டில் கொத்தடிமையாகப் பணிபுரியும் மனைவியை மீட்கப் போராடும் கணவனின் கதையே 'சிந்துபாத்'.
விஜய் சேதுபதி தமிழகத்தின் தென் பகுதியில் உள்ள ஒரு நகரத்தில் வசிக்கிறார். இவரும் உடன் இருக்கும் சூர்யாவும் திருடுவதையே தொழிலாகக் கொண்டு செயல்படுகின்றனர். நூதனத் திருடர்களாகப் பல இடங்களில் கைவரிசை காட்டும் இவர்களின் வாழ்க்கையில் மாற்றத்தைக் காண விரும்புகிறார் ஜார்ஜ். அதற்காக விஜய் சேதுபதி வசிக்கும் வீட்டை விற்கச் சொல்கிறார். இதனிடையே மலேசியாவில் இருந்து விடுமுறையில் வந்திருக்கும் அஞ்சலியைப் பார்த்ததும் விஜய் சேதுபதிக்குப் பிடித்து விடுகிறது. சில பல வழக்கமான சம்பவங்களுக்குப் பிறகு இருவரும் காதலிக்க, அது அஞ்சலியின் வீட்டுக்குத் தெரியவர ரணகளம் ஆகிறது. விடுப்பு முடிந்து அஞ்சலியை ஏர்போர்ட்டில் வழியனுப்பும் சில நொடிகளில் மனைவியாக்கிக் கொள்கிறார். இரண்டு நாட்களில் திரும்பி வந்துவிடுவேன் என்று நம்பிக்கையாய் சொல்லிச் செல்லும் அஞ்சலியின் போன் கால் விஜய் சேதுபதிக்குப் பதற்றத்தையும் பயத்தையும் கடத்துகிறது.
அஞ்சலிக்கு நேர்ந்தது என்ன, அவர் எங்கு எப்படி எதனால் சிக்கிக் கொண்டார், விஜய் சேதுபதி அஞ்சலியை மீட்க என்ன செய்கிறார், மிகப்பெரிய ரவுடிக் கூட்டத்தை வி.சே.வால் சமாளிக்க முடிந்ததா போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.
'பண்ணையாரும் பத்மினியும்', 'சேதுபதி' படங்களை இயக்கிய அருண் குமாரின் மூன்றாவது படம் சிந்துபாத். காதலையும், சென்டிமென்ட்டையும் தனக்கே உரிய பாணியில் பதிவு செய்யும் அருண் குமார் இதில் இரண்டையும் லேசுபாசாகவே அணுகியுள்ளார். கதைக்களத்துக்கான கனம் இருந்தும் திரைக்கதையில் போதுமான அழுத்தத்தைத் தரத் தவறியுள்ளார்.
விஜய் சேதுபதி திரு என்கிற கதாபாத்திரத்தில் சரியாகப் பொருந்துகிறார். காது கேட்காது, ஆனால், தேவையானது மட்டும் கேட்கும் என்கிற அவரின் கேரக்டர் ஸ்கெட்ச் சுவாரஸ்யம் சேர்க்கிறது. தம்பி சூர்யாவைத் தேடிப் பதறுவது, திருடும் முறைகளில் நூதன உத்தியைக் கையாள்வது, ரொமான்டிக் லுக் என்கிற பெயரில் காமெடி செய்வது, காதலில் கிறங்குவது, என் பொண்டாட்டி எங்கே டா என்று ஆவேசத்தில் சண்டையிடுவது என மாஸ் நாயகனுக்கான அம்சங்களில் வழக்கம் போல் திறமையை வெளிப்படுத்துகிறார்.
விஜய் சேதுபதியின் காதுக்கு ஈடு கொடுத்து சத்தம் போட்டுப் பேசும் கேரக்டரில் அஞ்சலி அழகாக நடித்திருக்கிறார். கொத்தடிமையின் வலியையும், குடும்பத்தின் பாரத்தையும், கணவன் மீதான காதலையும் வெளிப்படுத்தும் போது நடிப்பில் நிறைகிறார்.
இளம்பெண்ணின் தகப்பனாக விவேக் பிரசன்னா வித்தியாசமான நடிப்பை வழங்கியுள்ளார். விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, சூப்பர் கதாபாத்திரத்தில் படம் முழுக்க வருகிறார். ஜார்ஜ், அருள்தாஸ் ஆகியோர் கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தின் நோக்கத்தை நிறைவேற்றுகின்றனர். எதிர்மறைக் கதாபாத்திரத்தில் லிங்காவுக்கு கொடுக்கப்பட்ட பில்டப்புக்கு அவர் நடிப்பில் நியாயம் செய்யவில்லை.
விஜய் கார்த்திக் கண்ணனின் ஒளிப்பதிவு படத்துக்குப் பலம் சேர்க்கிறது. யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் ராக் ஸ்டார் பாடலை ஏற்றுக்கொள்ளலாம். ஆனால், அடுத்தடுத்து வரும் பாடல்கள் வேகத்தடைகளே. பின்னணி இசையில் கதைக்களத்துக்கான கனத்தைக் கூட்டியிருக்கிறார் யுவன். ரூபன் நீயும் நானும் பாடலுக்குக் கத்தரி போட்டிருக்கலாம்.
விஜய் சேதுபதியின் வாழ்க்கை, அஞ்சலியின் குடும்ப சூழல், விஜய் சேதுபதி- சூர்யாவுக்கும் இடையே உள்ள அன்பு ஆகியவற்றை இயக்குநர் அருண் குமார் காட்சியப்படுத்திய விதம் கவனிக்க வைக்கிறது. காதலும் காதல் நிமித்தமுமாக விஜய் சேதுபதி பின் தொடர்வதும் அஞ்சலி பின் காதல் புரிவதும் படத்தின் அதிகபட்ச நேரத்தை எடுத்துக்கொள்கின்றன. இடையிடையே வரும் பாடல்கள் படத்துக்கு எந்த விதத்திலும் உதவவில்லை.
வதைமுகாம் போல, சிறைச்சாலையைப் போல காட்சியளிக்கும் தாய்லாந்து கூடாரத்தில் ஏராளமான இளம்பெண்கள் சிறைபிடிக்கப்பட்டு சித்ரவதை செய்யப்படுவதை தாமதமாகவே இயக்குநர் பதிவு செய்கிறார். காஸ்மெடிக் துறையில் நடக்கும் சட்டவிரோதப் பிரச்சினையையும் மிகச் சரியாகவும், அழுத்தமாகவும் இயக்குநர் பதிவு செய்யவில்லை. இதனால் படத்துடன் ஒன்றமுடியாமல் போகிறது. அஞ்சலிக்கு நேரும் ஆபத்துகளைச் சொன்ன விதமும் எடுபடவில்லை. விஜய் சேதுபதி- சூர்யாவுக்கான அன்பின் பிணைப்பு குறித்தும் இயக்குநர் பதில் சொல்லவில்லை.
மொத்தத்தில் 'சிந்துபாத்' விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான இன்னொரு படமாக மட்டுமே உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT