Published : 12 Jun 2019 12:05 PM
Last Updated : 12 Jun 2019 12:05 PM
திமுகவிலிருந்து விலகிய ராதாரவி, முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து மீண்டும் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.
தமிழ்த் திரையுலகில் பல்வேறு படங்களில் நடித்து முன்னணி குணச்சித்ர நடிகராக வலம் வருபவர் ராதாரவி. இவர் தனது அரசியல் பிரவேசத்தை திமுகவில் தொடங்கினார். பின்பு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அதிமுகவில் இணைந்தார்.
நீண்டகாலமாக அதிமுகவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்து வந்தார். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு ஏற்பட்ட மாற்றத்தினால், அரசியலிலிருந்து சில காலம் விலகியிருந்தார். சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் திமுகவில் இணைந்தார்.
திமுகவில் இருக்கும் போது, 'கொலையுதிர் காலம்' பத்திரிகையாளர் சந்திப்பில் நயன்தாரா குறித்து ராதாரவி பேசிய பேச்சு மிகவும் சர்ச்சையாக உருவெடுத்தது. இது தொடர்பாக தமிழ்த் திரையுலகினர் பலரும் தங்களுடைய கடும் கண்டனங்களைப் பதிவு செய்தார்கள். இதனைத் தொடர்ந்து திமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இதனைத் தொடர்ந்து திமுகவிலிருந்து விலகுவதாக ராதாரவி பேட்டியளித்தார்.
இந்தச் சர்ச்சையைத் தொடர்ந்து அரசியலிலிருந்து விலகியே இருந்த ராதாரவி, இன்று (ஜூன் 12) காலை முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து மீண்டும் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT