Last Updated : 20 Jun, 2019 10:06 AM

 

Published : 20 Jun 2019 10:06 AM
Last Updated : 20 Jun 2019 10:06 AM

மீண்டும் அஜித் - விஜய் ரசிகர்கள் ஹேஷ்டேக் மோதல்

சமூக வலைதளத்தில் மீண்டும் அஜித் - விஜய் ரசிகர்களில் யார் முன்னிலை என்ற ஹேஷ்டேக் போட்டி தொடங்கியது.

ஜூன் 22-ம் தேதி விஜய் பிறந்த நாள். இதனைப் பெரிய அளவில் கொண்டாட விஜய் ரசிகர்கள் தயாராகி வருகிறார்கள். இதற்காக பல முன்னணி திரையரங்குகளில் விஜய்யின் ஹிட் படங்கள் திரையிடப்படவுள்ளன. முதன் முதலாக சத்யம் திரையரங்குகளில் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு 'தெறி' படத்தைத் திரையிடவுள்ளனர். இந்தத் திரையரங்கில் பிறந்த நாளுக்கென்று தனியாக இவ்வாறு பழைய படங்களை வெளியிட்டதில்லை எனத் தெரிகிறது.

விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, 'தளபதி 63' படக்குழுவினர் நேற்று (ஜூன் 19) மாலை 6 மணியளவில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டனர். அதில் ஜூன் 21-ம் தேதி மாலை படத்தின் தலைப்புடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும், ஜூன் 22-ம் தேதி அதிகாலை 12 மணியளவில் படத்தின் 2-வது லுக்கும் வெளியாகும் என அறிவித்தது. இந்த அறிவிப்பால் விஜய் ரசிகர்கள் மிகவும் குஷியானார்கள்.

மேலும், விஜய் பிறந்த நாளை முன்னிட்டு கிளிண்டன் ரோச் என்பவர் பிரத்யேகமாக வடிவமைத்த போஸ்டர் ஒன்றை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்டார். இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. போஸ்டர் வைரலாகப் பரவியது. பல திரையுலகப் பிரபலங்களும், போஸ்டர் வடிவமைப்புக்கு தங்களுடைய வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

தொடர்ச்சியாக விஜய் தொடர்பான விஷயங்கள் வெளியீட்டால், #ThalapathyBDayCDP, #ThalapathyBDayCelebrations உள்ளிட்ட சில ஹேஷ்டேக்குகள் ட்விட்டர் பக்கத்தில் ட்ரெண்டாகின. இது அஜித் ரசிகர்கள் மத்தியில் சிறு சலசலப்பை உண்டாக்கியது. உடனடியாக விஜய்க்கு எதிராக ஒரு ஹேஷ்டேக்கை உருவாக்கி ட்ரெண்ட் செய்யத் தொடங்கினர்.

இந்திய அளவில் முதல் இடத்தில் விஜய் பிறந்த நாள் தொடர்பான ஹேஷ்டேக்கும், இரண்டாம் இடத்தில் விஜய்க்கு எதிரான ஹேஷ்டேக்கும் ட்ரெண்டானது. இது சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் மத்தியில் பெரும் தலைக்குனிவை ஏற்படுத்தியது. பலரும் விஜய்க்கு எதிரான ஹேஷ்டேக் ட்ரெண்டுக்கு கடும் எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.

சமீபத்தில் வெளியான 'நேர்கொண்ட பார்வை' டீஸரில் அஜித் பேசும் "ஒருத்தர் மேல நீங்க விசுவாசம் காட்டுவதற்காக ஏன் இன்னொருத்தரை அசிங்கப்படுத்துறீங்க" என்ற வசனத்தை பலரும் குறிப்பிட்டு, இந்த ஹேஷ்டேக் ட்ரெண்டுக்கு எதிர்ப்பைப் பதிவு செய்ததைக் காண முடிந்தது.

அஜித் - விஜய் ரசிகர்கள் அல்லாதவர் பலரும், இங்கு தண்ணீர்  பிரச்சினை பெரிதாக இருக்கும் போது இந்த ஹேஷ்டேக் போட்டி எதற்கு என தங்களுடைய கண்டனத்தைப் பதிவு செய்தனர். இந்த ஹேஷ்டேக் போட்டியை அஜித் - விஜய் ரசிகர்கள் சில காலம் கைவிட்டிருந்தார்கள். நேற்றைய போட்டியின் மூலம் மீண்டும் ஹேஷ்டேக் போட்டியைத் தொடங்கியுள்ளது தெளிவாகியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x