Published : 15 Mar 2018 02:08 PM
Last Updated : 15 Mar 2018 02:08 PM
‘எங்களுக்கு வரிவிலக்கோ, மானியமோ வேண்டாம். திரைத்துறையை ஒழுங்கமைத்தாலே போதும்’ என பெப்சி கூட்டமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி தெரிவித்துள்ளார்.
டிஜிட்டல் நிறுவனங்களின் அதிக கட்டணத்தை எதிர்த்து மார்ச் 1-ம் தேதி முதல் புதுப்படங்களின் வெளியீடு நிறுத்தம், நாளை முதல் தமிழகத்தின் நடைபெறும் படப்பிடிப்புகள் மற்றும் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நிறுத்தம், வருகிற 23 ஆம் தேதி முதல் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் படப்பிடிப்புகளும் நிறுத்தம் என காலவரையரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம்.
இன்னொரு பக்கம், தமிழக அரசின் கேளிக்கை வரியை முற்றிலுமாக நீக்க வேண்டும் என்பது உள்பட சில கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகள் மூடப்படும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. ஆனால், இதில் சென்னை திரையரங்குகள் மட்டும் கலந்து கொள்ளவில்லை.
இந்நிலையில், இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த பெப்சி கூட்டமைப்பின் தலைவர் ஆர்.கே.செல்வமணி, “தயாரிப்பாளர் சங்கத்தின் காலவரையரையற்ற போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறோம். அரசு உடனடியாகத் தலையிட்டு இந்தப் பிரச்சினையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். காரணம், இரண்டு லட்சம் பேர் நேரடியாகவும், மூன்று லட்சம் பேர் மறைமுகமாகவும் சினிமாவில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
எங்களுக்கு வரிவிலக்கோ, மானியமோ தேவையில்லை. திரைத்துறையை ஒழுங்கமைத்தாலே போதும். இதையும் ஒரு தொழிலாக நினைத்து, தொழிலாளர் நல வாரியம் அமைக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT