Published : 14 Mar 2018 06:02 PM
Last Updated : 14 Mar 2018 06:02 PM

“மிஷ்கினின் பெரிய பலம் எது?” - சாந்தனு பாக்யராஜ் நெகிழ்ச்சி விளக்கம்

‘துப்பறிவாளன்’ படத்தைத் தொடர்ந்து மிஷ்கின் இயக்கும் அடுத்த படத்தில் ஹீரோவாக கமிட்டாகியிருகிறார் சாந்தனு பாக்யராஜ். லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்கிறார். மிகப்பெரிய டீமுடன் களமிறங்கும் சாந்தனு பாக்யராஜிடம் பேசினேன்...

மிஷ்கின் படத்தில் நடிக்கப் போகிறோம் என்ற உணர்வு எப்படியிருக்கிறது?

எல்லாமே கனவு போல இருக்கிறது. நான் சினிமாவுக்கு வந்து 10 வருடங்கள் ஆகிவிட்டன. என்னை மாதிரி ஒவ்வொரு நடிகரும், மிஷ்கின் மாதிரியான சிறந்த இயக்குநர்களின் போனுக்காகத்தான் காத்துக் கொண்டிருப்பார்கள். லிப்ரா புரொடக்‌ஷன்ஸ் ரவீந்திரன் சாருக்கு மிகப் பெரிய நன்றி. என்னை வைத்து படம் பண்ண ஓகே சொன்ன மிஷ்கின் மற்றும் பி.சி.ஸ்ரீராம் சாருக்கு நன்றி. கடின உழைப்பு, இத்தனை வருடக் காத்திருப்பு எல்லாவற்றையும் தாண்டி, என்னைச் சுற்றி இருப்பவர்கள், எனக்காக வேண்டிக் கொண்டவர்களின் பலனாகத்தான் இந்தப் படம் கிடைத்திருக்கிறது. அவர்களுக்கும் நன்றி.

ஷூட்டிங் எப்போது தொடங்குகிறது?

ஷூட்டிங் தேதி இன்னும் முடிவு செய்யவில்லை. எல்லாமே ஆரம்ப நிலையில்தான் இருக்கிறது. விரைவில் படத்தின் தலைப்பு உள்பட மற்ற விஷயங்களும் அறிவிக்கப்படும்.

மிஷ்கின் இயக்கத்தில் வெளியான படங்களில் உங்களுக்குப் பிடித்தது?

‘அஞ்சாதே’ மற்றும் ‘நந்தலாலா' ஆகிய இரண்டு படங்களும் எனக்கு ரொம்பப் பிடிக்கும். காரணம், அவற்றின் பாத்திரப் படைப்பு. கமர்ஷியல் சினிமா காலகட்டத்தில், எதற்கும் காம்ப்ரமைஸ் செய்து கொள்ளாமல் கேரக்டரை அழகாக வடிவமைப்பதுதான் மிஷ்கின் சாரின் பெரிய ப்ளஸ். கேரக்டர் நன்றாக அமைந்துவிட்டால், அதை இப்படியொரு ஸ்டார் தான் பண்ண வேண்டும் என்பது கிடையாது. யார் அந்த கேரக்டரில் நடிக்கிறார்களோ, அவர் ஸ்டாராக ஆகிவிடுவார்.

இந்தப் படத்துக்குப் பிறகு சாந்தனுவின் சினிமா வாழ்க்கையில் மாற்றம் ஏற்படுமா?

அது எல்லாமே மக்கள் கையிலும், ஆண்டவன் கையிலும்தான் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரைக்கும், என்னுடைய எல்லாப் படங்களிலுமே 100 சதவீத உழைப்பு இருக்கும். அதைத்தாண்டி மக்களும், ஆண்டவனும்தான் ரிசல்ட்டை முடிவு செய்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x