Published : 29 Mar 2018 11:57 AM
Last Updated : 29 Mar 2018 11:57 AM
உதயநிதி ஸ்டாலினுக்கு ‘மக்கள் அன்பன்’ என்ற பட்டத்தைக் கொடுத்துள்ளார் இயக்குநர் சீனு ராமசாமி.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘கண்ணே கலைமானே’. சீனு ராமசாமி இயக்கியுள்ள இந்தப் படத்தில், தமன்னா ஹீரோயினாக நடித்துள்ளார். மதுரை, வாடிப்பட்டியை பின்னணியாகக் கொண்டு இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.
வைரமுத்து பாடல்கள் எழுத, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், உதயநிதி ஸ்டாலினுக்கு ‘மக்கள் அன்பன்’ என்ற பட்டத்தைக் கொடுத்துள்ளார் சீனு ராமசாமி. “கண்ணே கலைமானே படம் முழுவதும் பார்த்து முடித்த கணத்தில், என் மனதில் உதயநிதி ஸ்டாலினை ‘மக்கள் அன்பன்’ என்றே அழைக்கத் தோன்றியது” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் சீனு ராமசாமி.
இதற்கு பதிலளித்துள்ள உதயநிதி ஸ்டாலின், “உங்கள் அன்புக்கு நன்றி சார். அந்த அளவிற்குத் தகுதி எனக்கு இப்பொழுது இருப்பதாக நான் நம்பவில்லை. படம் வெற்றி பெற்றால் மகிழ்ச்சி” எனத் தெரிவித்துள்ளார்.
சீனு ராமசாமியின் இந்தப் பட்டத்தை, சமூக வலைதளங்களில் பலரும் விமர்சித்து வருகின்றனர். ஏற்கெனவே விஜய் சேதுபதிக்கு ‘மக்கள் செல்வன்’ என்ற பட்டத்தைக் கொடுத்தவர் சீனு ராமசாமி.
உதயநிதி ஸ்டாலினுக்கு ‘மூன்றாம் கலைஞர்’ எனப் பட்டம் கொடுத்து மதுரையில் வைக்கப்பட்ட பேனர் சர்ச்சைக்கு உள்ளானது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT