Published : 06 Mar 2018 11:55 AM
Last Updated : 06 Mar 2018 11:55 AM
ஹைதராபாத்தில் நேற்று நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து, இந்த வாரமாவது புதுப்படங்கள் ரிலீஸாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
க்யூப், யு.எஃப்.ஓ. போன்ற டிஜிட்டல் நிறுவனங்களுக்கு எதிராக, கடந்த 1ஆம் தேதியில் இருந்து எந்த புதுப்படத்தையும் ரிலீஸ் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்தைச் சேர்ந்த சினிமா தயாரிப்பாளர் சங்கங்கள். இதனால் கடந்த வாரம் எந்தப் படமும் ரிலீஸாகாத நிலையில், ஹைதராபாத்தில் நேற்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஏற்கெனவே டிஜிட்டல் நிறுவனங்களுக்கு வைத்த கோரிக்கைகளை, அவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர்.
தயாரிப்பாளர்கள் சங்கம் எதிர்பார்த்த அளவுக்கு பேச்சுவார்த்தையில் சுமூக உடன்படிக்கை ஏற்படவில்லை. மேலும், இந்த விஷயத்தில் திரையரங்கு உரிமையாளர்களும் தயாரிப்பாளர்களுக்கு எந்தவிதமான ஒத்துழைப்பையும் அளிப்பதில்லை என்ற முடிவை எடுத்திருக்கிறார்கள். எனவே, தங்களது நியாயமான கோரிக்கைகள் நிறைவேறும்வரை புதுப்படங்கள் ரிலீஸாகாது என தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
முதல்கட்ட பேச்சுவார்த்தை ஹைதராபாத்திலும், இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை சென்னையிலும், மூன்றாம்கட்ட பேச்சுவார்த்தை பெங்களூரிலும் நடைபெற்றதைத் தொடர்ந்து, நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது நான்காம்கட்ட பேச்சுவார்த்தை என்பது குறிப்பிடத்தக்கது. இதுவும் தோல்வியில் முடிந்ததால், இந்த வாரமாவது புதுப்படங்கள் ரிலீஸாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT