Published : 13 Sep 2014 11:46 AM
Last Updated : 13 Sep 2014 11:46 AM
‘வால்டர் வெற்றிவேல்’ படத்தில் சத்யராஜைப் பார்த்தது போலவே கம்பீரமாக இருக்கிறார் சிபிராஜ். ‘நாணயம்’ படத்துக்குப் பின் நீண்ட இடைவேளைக்கு பிறகு ‘நாய்கள் ஜாக்கிரதை’ படத்தில் நடிக்கும் அவரைச் சந்தித்தோம். “புது முயற்சியை விரும்பும் ரசிகர்களுக்கு இந்தப் படம் மிகவும் பிடிக்கும். இந்தப் படத்தில் இருக்கும் க்ரைமும் நாயைப் பயன்படுத்தியிருக்கும் விதமும் தமிழ் சினிமாவுக்கு புதுசு” என்றபடி பேசத் தொடங்கினார் சிபிராஜ்.
நாய்களை பின்னணியாக கொண்டு நிறைய ஹாலிவுட் படங்கள் வந்துள்ளன. அதன் தாக்கம்தான் ‘நாய்கள் ஜாக்கிரதை’ என்று சொல்லலாமா?
தமிழில் நாய்களை உபயோகப்படுத்தி பல படங்கள் எடுக்கப்பட்டுள்ளன. ஆனால் நாயகனுக்கு சமமான வேடத்தில் ஒரு நாய் நடித்திருப்பது இதுவே முதல் முறை. நீங்கள் சொல்வதுபோல் ஹாலிவுட்டில் நாய்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து பல படங்கள் வந்திருக்கிறது. அந்தப் படங்களின் தாக்கம் இதில் இருக்கும். ஆனால் அதிலுள்ள காட்சிகள் ஏதும் இப்படத்தில் இல்லை. அந்தப் படங் களின் சாயல் கொஞ்சம்கூட இதில் இருக்காது.
இது ஒரு காமெடி, ஆக்ஷன் த்ரில்லர். முதல் பாதி முழுக்க காமெடியாக இருக்கும், இரண்டாவது பாதி முழுவதும் த்ரில்லர். நான் முதல் முறையாக இந்தப் படத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டராக நடித்துள்ளேன். இதன் டிரெயிலரைப் பார்த்து விஜய் என்னைப் பாராட்டி எஸ்.எம்.எஸ் அனுப்பியிருந்தார். ஒரு மாஸ் ஹீரோ எந்த பந்தாவும் இல்லாமல் என்னைப் பாராட்டி எஸ்.எம்.எஸ் அனுப்பியது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.
நாயுடன் நடிக்கும்போது ஏதும் கடி வாங்கினீர்களா?
படப்பிடிப்புக்கு முன்பே நான் அந்த நாயுடன் பழகத் தொடங்கினேன். அதை தினமும் வாக்கிங் அழைத்துச் செல்வது, சாப்பாடு வைப்பது, குளிப்பாட்டுவது என்று பழகிய பிறகுதான் படப்பிடிப்பைத் தொடங்கினோம். இதனால் முதல்கட்ட படப்பிடிப்பு எளிதாக நடந்தது. ஆனால் இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் நிறைய சேஸிங், நாய் கடிப்பது போன்ற காட்சிகளை எடுக்கவேண்டி இருந்தது. அப்போது அதனிடம் நிறைய கடி வாங்கினேன். படம் ஆரம்பிக்கும் முன்பே, முன் ஏற்பாடாக ஊசியெல்லாம் போட்டிருந்ததால் பெரிய பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை.
‘நாணயம்’ படத்துக்கு பிறகு உங்களுக்கு மிகப்பெரிய கேப் விழுந்துவிட்டதே?
‘நாணயம்’ படத்துக்கு பிறகு வித்தியாசமான படங்களைச் செய்யவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தேன். அதற்காக 300 கதைகள்வரை கேட்டிருப்பேன். ‘பீட்சா’ படம் ஹிட் ஆன பிறகு நிறையப் பேர் பேய்க்கதைகளுடன் வந்தார்கள். ஒரு சிலர் ‘பருத்திவீரன்’ போன்ற கதைகளுடன் வந்தார்கள். சில கதைகள் என் ரேஞ்சைத் தாண்டி இருந்தது. அத்தனை கதைகளையும் நிராகரித்தேன். அதில் சில கதைகளில் நடித்திருந்தாலே நான் 15 படங்கள் வரை நடித்திருப்பேன். ஆனால் என் மனதைத் தொட்ட கதையில் நடிக்கவேண்டும் என்பதால்தான் இத்தனை நாள் தாமதம் ஏற்பட்டது.
இந்த காலகட்டத்தில் நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். முக்கியமாக கமல் சாரின் ஆலோசனைகளை பின்பற்றினேன். ‘ஸ்டூடண்ட் நம்பர் 1’ படத்தில் நடிக்க ஒப்பந்தமான சமயத்தில் கமல் சாரைச் சந்தித்தேன். ‘அமெரிக்காவில் ஒரு ஆக்டிங் கோர்ஸ் இருக்கு. போயிட்டு வாங்க’ என்றார். அந்த சமயத்தில் படம் ஆரம்பித்து விட்டதால் என்னால் போக முடியவில்லை. அதற்கு பிறகு, தொடர்ந்து படங்களில் நடித்ததால் அது தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது. இப்போது கிடைத்த இடைவெளியில் அவரது ஆலோசனையைப் பின்பற்றி அமெரிக்கா சென்று ஆக்டிங் கோர்ஸை முடித்தேன். அதோடு நல்ல கதையைத் தேர்ந்தெடுப்பது எப்படி என்பதையும் கற்றுக்கொண்டதாய் நினைக் கிறேன்.
உங்களுக்கு பிறகு அறிமுகமான நிறைய ஹீரோக்கள் இப்போது முன்னணி நாயகர்களாக இருக்கிறார்கள். அவர்களைப் பற்றி உங்கள் கருத்து என்ன?
எனக்கு பிறகு வந்த ஹீரோக்கள் எல்லாருமே வித்தியாசமான படங்களைச் செய்துதான் இந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறார்கள். தமிழ் சினிமாவில் தற்போதைய மாற்றம் மிக ஆரோக்கியமானதாக இருக்கிறது. டாப் ஹீரோக்கள் படம் மட்டும் தான் ஓடும், மற்ற ஹீரோக்களின் படம் ஓடாது என்ற நிலை இப்போது இல்லை. இப்போது படம் நன்றாக இருந்தால் யார் நடித்தாலும் ஓடுகிறது. ‘எனக்கு ஏதாவது புதுசா காட்டு, அதை ஜனரஞ்சகமா சொல்லு’ என்றுதான் மக்கள் கேட்கிறார்கள். அந்த விஷயங்கள் எல்லாமே இந்தப் படத்தில் இருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT