Published : 31 Mar 2018 04:28 PM
Last Updated : 31 Mar 2018 04:28 PM
அனுமதி பெறாமல் வெளிநாட்டில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதால், விஜய் சேதுபதியின் ‘ஜுங்கா’ மீது நடவடிக்கை பாயலாம் எனத் தெரிகிறது.
‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தை இயக்கிய கோகுல் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘ஜுங்கா’. விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்க, ‘வனமகன்’ சயிஷா ஹீரோயினாக நடிக்கிறார். விஜய் சேதுபதி இதுவரை நடித்ததிலேயே இதுதான் அதிக பட்ஜெட்டில் உருவாகும் படம் என்பதால் அவரே இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
‘ஜுங்கா’ படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு பாரீஸில் நடைபெறுகிறது. வெளிநாடுகளிலும் தற்போது படப்பிடிப்பு நடத்த தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தடைவிதித்துள்ளது. ஆனால், தடையை மீறி பாரீஸ், ஜார்ஜியா உள்ளிட்ட இடங்களில் ‘ஜுங்கா’ படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
எனவே, ‘ஜுங்கா’ மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படுமா? என தயாரிப்பாளர்கள் சங்க நிர்வாகி ஒருவரிடம் பேசினேன்.
“விஜய் சேதுபதியின் ‘ஜுங்கா’ படப்பிடிப்பை வெளிநாடுகளில் நடத்த எங்களிடம் முறைப்படி அனுமதி பெறவில்லை. எங்களுக்காக விஷயம் தெரிந்து விசாரித்தபோது, படப்பிடிப்புக்கான பணத்தை ஏற்கெனவே கட்டிவிட்டதால் கண்டிப்பாக படப்பிடிப்பை நடத்தியாக வேண்டிய சூழ்நிலை என படக்குழுவினர் சார்பாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஷூட்டிங் முடிந்து சென்னை திரும்பியதும் இதுகுறித்து அவர்களிடம் பேசி முடிவு எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT