Published : 07 Mar 2018 01:15 PM
Last Updated : 07 Mar 2018 01:15 PM
இதுவரை ட்விட்டரை மட்டுமே பயன்படுத்திவந்த ரஜினிகாந்த், தற்போது இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கிலும் இணைந்துள்ளார்.
ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வயது வித்தியாசமின்றி அனைவருமே சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர்.
குறிப்பாக, சினிமாத்துறையைச் சேர்ந்தவர்கள் தங்களைப் பற்றிய அல்லது தங்கள் படங்களைப் பற்றிய ஒவ்வொரு தகவலையும் சமூக வலைதளங்களிலேயே பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில், 2013ஆம் ஆண்டுதான் ட்விட்டரில் இணைந்தார் ரஜினிகாந்த்.
ஆனால், 2014ஆம் ஆண்டுதான் முதல் ட்வீட்டையே பதிவிட்டார். முதல் மூன்று ட்வீட்டுகளில், ட்விட்டரில் அவரை வரவேற்ற ரசிகர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ள ரஜினி, நான்காவது ட்வீட்டாக நரேந்திர மோடி வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுவரை 116 ட்வீட்டுகளைப் பதிவிட்டுள்ளவர், ஒரு ரீட்வீட் கூட செய்யவில்லை. 45 லட்சத்துக்கும் அதிகனோர் அவரை ஃபாலோ செய்ய, அவரோ வெறும் 24 பேரை மட்டுமே பின்தொடர்கிறார்.
நரேந்திர மோடியின் இரண்டு கணக்குகள், அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மான், தனுஷ், அனிருத், அவர் மகள்கள் செளந்தர்யா மற்றும் ஐஸ்வர்யா ஆகியோரைத் தவிர மற்ற எல்லாமே செய்தி நிறுவனங்களைத்தான் அவர் பின்தொடர்கிறார்.
இந்நிலையில், நேற்று முதல் இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கில் இணைந்துள்ளார் ரஜினிகாந்த். அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் 'வணக்கம்' என முதல் பதிவை இட்டுள்ளார். தற்போதுவரை அந்தப் பக்கத்தை ஒரு லட்சத்து 38 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர். அதேபோல், இன்ஸ்டாகிராமிலும் 'வணக்கம், வந்துட்டேன்னு சொல்லு' என்று தன்னுடைய புகைப்படத்துடன் முதல் பதிவை இட்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் தற்போதுவரை 37 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அவரை ஃபாலோ செய்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT