Published : 13 Mar 2018 12:45 PM
Last Updated : 13 Mar 2018 12:45 PM

நடிகர்கள், இயக்குநர்களின் சம்பளத்தை முறைப்படுத்தவும் ஸ்டிரைக் நடத்த வேண்டும் - தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே. சதீஷ் குமார்

‘நடிகர்கள் மற்றும் இயக்குநர்களின் சம்பளத்தை முறைப்படுத்தவும் ஸ்டிரைக் நடத்த வேண்டும்’ என தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் நடைபெற்றுவரும் ஸ்டிரைக் குறித்து தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ் குமாரிடம் பேசினேன்.

‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி:

“இந்த ஸ்டிரைக் நடக்கும்போதே, ஒட்டுமொத்தமாக எல்லாவற்றுக்கும் சேர்த்து ஸ்டிரைக் நடத்த வேண்டும். குறிப்பாக, நடிகர்களின் சம்பளம் மற்றும் இயக்குநர்களின் சம்பளம் ஆகியவற்றையும் முறைப்படுத்த வேண்டும். மற்ற மாநிலங்களில் இருப்பது போல குறிப்பிட்ட தொகையை சம்பளமாக நிர்ணயித்து, கூடுதலாக படத்தின் லாபத்தில் இருந்து ஷேர் கொடுத்துவிடலாம். இயக்குநர்கள் மற்றும் பெரிய நடிகர்களுக்கு இந்த முறையைப் பயன்படுத்த வேண்டும்.

கேரளாவை எடுத்துக் கொண்டால் மம்மூட்டி, மோகன்லால் போன்றவர்கள் இந்திய அளவில் பெரிய நடிகர்கள்தான். ஆனால், இரண்டு அல்லது மூன்று கோடிக்கு மேல் அவர்கள் சம்பளம் வாங்குவதில்லை. ஆனால், தமிழ் சினிமாவில் புது நடிகர்களே நான்கு அல்லது ஐந்து கோடி சம்பளமாகக் கேட்கிறார்கள்.

எனவே, படம் ஓடினாலும், ஓடாவிட்டாலும் குறைந்தது ஒரு கோடி ரூபாய் சம்பளம் என நிர்ணயித்துவிடலாம். படம் ஓடினால் குறிப்பிட்ட சதவீதத்தை அவர்களுக்கு ஷேராகக் கொடுத்துவிடலாம். படம் ஓடவில்லை என்றால், நஷ்டத்தை ஏற்றுக்கொள்ள வேண்டாம். அப்போதுதான் நடிகர்களுக்கும் பொறுப்பு வரும், நல்ல கதைகளாகத் தேர்ந்தெடுத்து நடிப்பார்கள். தங்களுக்கு லாபத்தில் பங்கு கிடைக்கும் என்பதற்காகவாவது நன்றாக ஓடக்கூடிய படங்களில் நடிப்பார்கள். இயக்குநர்களுக்கும் இதையே நடைமுறைப்படுத்தினால் தமிழ் சினிமா வாழும்” என்று தெரிவித்தார் ஜே.எஸ்.கே.சதீஷ் குமார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x