Last Updated : 30 Mar, 2018 06:51 PM

 

Published : 30 Mar 2018 06:51 PM
Last Updated : 30 Mar 2018 06:51 PM

“தமிழ் சினிமாவைத் தனியாருக்குத் தாரைவார்க்க முடியாது” - விஷால் திட்டவட்டம்

‘தமிழ் சினிமாவைத் தனியாருக்குத் தாரைவார்க்க முடியாது’ என விஷால் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

டிஜிட்டல் நிறுவனங்களின் அதிக கட்டணம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 1 ஆம் தேதி முதல் புதிய படங்களை ரிலீஸ் செய்யாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம். மேலும், கடந்த 16 ஆம் தேதி முதல் படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன், 23 ஆம் தேதி முதல் வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளில் நடைபெறும் படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், இதுகுறித்து விளக்குவதற்காக இன்று பத்திரிகையாளர்களை சந்தித்தார் விஷால். “பொதுமக்கள் திரையரங்கிற்கு வந்து படம் பார்க்கும்போது, எந்தவித சிரமமும் இல்லாமல் படம் பார்க்க வேண்டும். அனைத்துத் திரையரங்குகளிலும் புரொஜக்டர்கள் கட்டாயம் இருக்க வேண்டும். அத்துடன், டிக்கெட் விற்கும் முறையை கணினி மயமாக்க வேண்டும்.

ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும்போது வசூலிக்கப்படும் 30 ரூபாய் எக்ஸ்ட்ரா கட்டணம், மக்களுக்குப் பெரும் சுமையாக உள்ளது. இது யாருக்கான லாபம் என்று தெரியவில்லை. சினிமா சாராத ஒரு நிறுவனம் இங்கே கோடி கோடியாகச் சம்பாதிக்கிறது. ஆனால், தயாரிப்பாளர்கள் நஷ்டமடைந்து கொண்டே இருக்கிறோம். தமிழ் சினிமாவைத் தனியாருக்குத் தாரைவார்க்க முடியாது.

எங்களுடைய கோரிக்கைகள் நிறைவேறும்வரை போராட்டம் தொடரும். இதை வேலை நிறுத்தம் என்று சொல்வதைவிட, தமிழ் சினிமாவை சீரமைக்கும் பணி என்றே கருதுகிறோம்.

தமிழக அரசு இந்தப் பிரச்சினையில் நேரடியாகத் தலையிட்டு தீர்வுகாண வேண்டும். எனவே, தமிழக முதல்வர் மற்றும் செய்தித்துறை அமைச்சரை நேரில் சந்தித்து, பேரணியாகச் சென்று மனு கொடுக்க இருக்கிறோம். இதற்காக அனுமதி கேட்டுள்ளோம். அனேகமாக வருகிற புதன்கிழமை பேரணி நடத்தலாம் என்று நினைக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார் விஷால்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x