Published : 22 Mar 2018 07:07 PM
Last Updated : 22 Mar 2018 07:07 PM
நாளை முதல் தமிழகம் முழுவதும் திரையரங்குகள் இயங்கும் என சென்னை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு விதித்துள்ள 8 சதவீத கேளிக்கை வரியை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும்; அதிக இருக்கைகள் உள்ள திரையரங்குகளில், இருக்கைகளைக் குறைக்க அனுமதி அளிக்க வேண்டும்; வருடத்துக்கு ஒருமுறை புதுப்பிக்க வேண்டிய திரையரங்கு உரிமத்தை, 3 வருடங்களுக்கு ஒருமுறை புதுப்பிக்கும் வகையில் மாற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 16 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இந்த கோரிக்கைகள் தொடர்பாக கடந்த 20 ஆம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் மனு அளித்தனர். சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெற்று வருவதால், இரண்டு நாட்கள் காத்திருக்கும்படி முதல்வர் பழனிச்சாமி தெரிவித்ததாக தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்க பொதுச் செயலாளர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
இந்நிலையில், இன்று மாலை தலைமைச் செயலகத்தில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு, வணிகவரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அதிகாரிகளுடன் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தைச் சேர்ந்த திருப்பூர் சுப்ரமணியம், அபிராமி ராமநாதன், பன்னீர்செல்வம் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
பேச்சுவார்த்தைக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய சென்னை திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அபிராமி ராமநாதன், ''எங்களுடைய கோரிக்கைகளில் எதெல்லாம் முடியுமோ, அதிகாரிகளுடன் பேசி அவற்றை நிறைவேற்றித் தருவதாக அமைச்சர்கள் உத்தரவாதம் அளித்துள்ளனர். எனவே, தமிழகம் முழுவதும் நாளை முதல் எல்லா திரையரங்குகளும் இயங்கும். திரையரங்குகளிடம் எந்தப் படம் உள்ளதோ, அதை திரையிடுவார்கள்'' என்றார்.
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் வேலை நிறுத்தம் குறித்த கேள்விக்கு, “நேற்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினோம். அவர்களும் எங்களிடம் சில கோரிக்கைகள் வைத்துள்ளனர். எங்களுடைய சங்க உறுப்பினர்களுடன் அந்த கோரிக்கைகளைக் கலந்தாலோசித்து, வருகிற செவ்வாய் அல்லது புதன்கிழமை மறுபடியும் தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறோம். தமிழ்ப் புத்தாண்டு முதல் நல்லது நடக்கும் என நம்புகிறோம்” எனப் பதில் அளித்தார் அபிராமி ராமநாதன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT