திரை விமர்சனம் - 100
காவல் துறையில் சேர்ந்து ரவுடிகளை ஒழிக்க வேண் டும் என்பதற்காக உடற் பயிற்சி செய்து உடலை ஃபிட்டாக வைத்திருக்கிறார் அதர்வா. எதிர் பார்த்தபடியே அவருக்கு எஸ்.ஐ. வேலை கிடைக்கிறது. மிகுந்த ஆர்வத்தோடு பணியில் சேரும் அவருக்கு, கட்டுப்பாட்டு அறைக்கு வரும் தொலைபேசி அழைப்பு களை விசாரிக்கும் பணி ஒதுக்கப் படுகிறது. கனவு தகர்ந்து, மனம் தளரும் அதர்வாவை சீனியர் அதி காரி ராதாரவி சமாதானம் செய் கிறார். இந்நிலையில், கட்டுப் பாட்டு அறையில் அதர்வாவுக்கு வரும் 100-வது அழைப்பு திருப்பு முனையாக அமைகிறது. அதைத் தொடர்ந்து போதைப் பொருள் விற்பனை, மாணவிகள் கடத்தல் என த்ரில்லர் தடத்தில் படம் பயணிக்கிறது. கடத்தப்பட்ட மாணவிகள் காப்பாற்றப்பட்ட னரா? வில்லனை அதர்வா என்ன செய்கிறார் என்பது மீதிக்கதை.
கட்டுப்பாட்டு அறை என்ற புதிய களத்தை இயக்குநர் சாம் ஆண் டன் தேர்ந்தெடுத்தது கவனம் ஈர்க் கிறது. உதவி கேட்டு பொதுமக் களிடம் இருந்து வரும் அழைப்பு களை, கட்டுப்பாட்டு அறை போலீஸார் எப்படி கையாள்கின் றனர் என காட்டியிருப்பது ரசிக்க வைக்கிறது.
அதர்வா உடலை முறுக்கேற்றி, மிடுக்கான இளம் காவல் அதிகாரியாக நடித்திருக்கிறார். கதாநாயகி ஹன்சிகா மோத்வானி, துணை நடிகையைப் போல ஓரிரு காட்சிகளில் மட்டுமே வந்து செல்கிறார். அவரைவிட, அதர்வா நண்பனின் தங்கையாக வரும் ஹரிஜா அதிகம் கவர்கிறார்.
போதைப் பொருள் கடத்து பவராக மைம் கோபி. காவல் ஆணையர் ஆடுகளம் நரேனுக்கு அட்வைஸ் செய்யும் வழக்க மான கதாபாத்திரம். சீனியர் அதி காரியாக வரும் ராதாரவி, அனுபவ நடிப்பை வெளிப்படுத்துகிறார். தான் ஏன் பிஸ்டல் பெருமாள் ஆனேன் என விளக்கும் காட்சி களில் நெகிழ வைக்கிறார். ஒரு குற்றவாளியையாவது சுட வேண் டும் என்பதுதான் அவரது லட்சிய மாம். என்னவொரு லட்சியம்? யோகிபாபு நகைச்சுவை வெடி களை ஆங்காங்கே தூவி சிரிக்க வைக்கிறார்.
அதர்வாவின் நண்பனாக இயல் பாக நடித்துள்ளார் தயாரிப்பாளர் மகேஷ். சமீபத்தில் மறைந்த நாடக நடிகர் சீனுமோகனுக்கு, படம் முழுக்க மைம் கோபியின் பிரதான உதவியாளராக வரும் பாத்திரம்.
எடுத்த களம் வித்தியாசமாக இருந்தாலும், திரைக்கதை வலு வாக இல்லாமல் ஆங்காங்கே அறுந்த ரீல்களாக தொங்குவ தால் அதர்வாவின் ஆக்ரோஷ மும், சண்டைக் காட்சிகளும் எடு படவில்லை. இடைவேளை வரை வரும் பெரும்பாலான காட்சிகள் எளிதில் ஊகிக்கக்கூடியதாகவே நகர்கின்றன. 2-ம் பாதியில் வரும் எதிர்பாராத திருப்பங்களிலும் சுவாரஸ்யம் இல்லை.
வில்லன் யார் என கடைசியில் காட்டும்போது பார்வையாளர்கள் அதிர்ந்துபோகும் வகையில் காட்சி களை கட்டமைத்திருக்க வேண் டாமா? அப்படியின்றி வசனங்கள், அதிரடி இசையால் ஒப்பேற்ற முயற்சித்துள்ளனர். வில்லன் ஏன் அவ்வளவு கொடூரமானவராக மாறினார் என்பதற்கான பின்னணி யும் இல்லை. போதை கடத்தல் பேர்வழிக்கு காவல் துறை அதி காரியான அன்வர் உதவுவது பேத்தல். வன்கொடுமை, கடத்தல் என கிடைத்த எல்லாவற்றையும் அமெச்சூர்தனமாக கையாண் டுள்ளனர்.
சாம் சி.எஸ். பின்னணி இசை, குற்றவாளிகளை விரட்டும் சேஸிங் காட்சிகளில் திரையில் பரபரப்பைக் கூட்டுகிறது. பாடல் கள் மனதில் நிற்கவில்லை. கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு, நல்ல த்ரில்லருக்கு ஏற்ற அளவில் உள்ளது.
திரைக்கதையில் திருத்தங் களை செய்து, விறுவிறுப்பைக் கூட்டியிருந்தால் மறக்கமுடியாத போலீஸ் படங்கள் வரிசையில் ‘100’ம் இடம்பிடித்திருக்கும்.
