Published : 07 May 2019 10:21 AM
Last Updated : 07 May 2019 10:21 AM
நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் ஒரு சூப்பர் ஸ்டார் ஆனால் அவர் அவ்வளவு சூப்பர் நடிகர் இல்லை என கருத்து தெரிவித்துள்ளார் நடிகர் சித்திக்.
மலையாள சினிமாவில் 300 படங்களுக்கும் மேல் நடித்துள்ள நடிகர் சித்திக். இவர் ஒரு தயாரிப்பாளரும் கூட. குணச்சித்திர கதாபாத்திரங்களிலும், வில்லன் கதாபாத்திரங்களிலும் நடித்து பிரபலமானவர். சமீபத்தில் இவர் இணையதளம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் தான் மேற் குறிப்பிட்ட கருத்துக்களைப் பேசியுள்ளார்.
"ஒவ்வொரு சினிமா துறையும் சூப்பர் ஸ்டார்களை நம்பியே இருக்கிறது. 'மதுர ராஜா', 'லூசிஃபர்' போன்ற படங்களை எடுக்க மம்மூட்டி, மோகன்லால் போன்ற சூபப்ர் ஸ்டார்கள் இருப்பது அவசியம். உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால், மொத்த துறையுமே இது போன்ற நடிகர்களை நம்பித்தான் இருக்கிறது. என்னைப் போன்றவர்கள் (உறுதுணை நடிகர்கள்) இந்த சூப்பர் ஸ்டார்களால் தான் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கிறோம்.
மலையாள சினிமாத்துறைக்கு மம்மூட்டி, மோகன்லால் என்ற இரண்டு பெரிய நட்சத்திரங்கள் இருப்பது அதிர்ஷ்டமே. இருவருமே சூப்பர்ஸ்டார். இருவருமே மிகச்சிறந்த நடிகர்கள். ஆனால் தமிழ் சினிமாவில் நிலை வேறு. விஜய் போன்றவர்கள் சூப்பர் ஸ்டாராக இருக்கலாம் ஆனால் அவர் சிறந்த நடிகர் அல்ல. அவரது நட்சத்திர அந்தஸ்துதான் அவர் துறையில் உயரக் காரணம். ஆனால் கமல்ஹாசன் சிறந்த நடிகர், அதே சமயம் சூப்பர் ஸ்டார் என நான் நம்புகிறேன்" என்று சித்திக் குறிப்பிட்டுள்ளார்.
சித்திகின் இந்த கருத்து சர்ச்சையை உருவாக்கியுள்ளது. 'மெர்சல்' படத்தில் விஜய்யுடன் சேர்ந்து நடித்த நடிகர் ஹரீஷ் பேரடி, சித்திக்கின் கருத்துக்கு பதில் கூறும் வகையில் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், "விஜய் ஒரு சூப்பர் ஸ்டார் அதே சமயம் சிறந்த நடிகரும் கூட. மற்ற சூப்பர் ஸ்டார்களைப் போல அல்லாமல் விஜய் அடக்கமானவர், நல்ல மனிதர். இதெல்லாம் என் தனிப்பட்ட அனுபவத்தில் சொல்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT