Published : 29 May 2019 04:19 PM
Last Updated : 29 May 2019 04:19 PM
திரையரங்க உரிமையாளர்கள் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு, இயக்குநர் பாரதிராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு திரையரங்க மற்றும் மல்டி ப்ளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் அறிக்கை ஒன்று, நேற்று (மே 28) இணையத்தில் வெளியானது. அதில், படங்களுக்கு இந்த விகிதத்தில் முதல் வாரம், 2-வது வாரம் ஷேர் தொகை கொடுக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது. இதனைத் தீர்மானமாகக் கொண்டு வந்திருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இது நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மத்தியில் சிறு சலசலப்பை உண்டாக்கியது. ஏனென்றால் திரையரங்க உரிமையாளர்கள் குறிப்பிட்டிருந்த நடிகர்கள் பட்டியலில், கமல்ஹாசன், விக்ரம், கார்த்தி உள்ளிட்ட சில நடிகர்களின் பெயர்கள் கூட ஷேர் தொகை பட்டியலில் குறிப்பிடப்படவில்லை. தற்போது திரையரங்க உரிமையாளர்கள் தீர்மானத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா.
இது தொடர்பாக பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், “என் இனிய தமிழ் மக்களே! தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு சரியான தலைமை இல்லாத சூழ்நிலையில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களின் எதிர்காலத்தைச் சூறையாடக்கூடிய ஒரு அபாயகரமான செயல்திட்டத்தை திருப்பூர் சுப்ரமணியம் தலைமையில் இயங்குகின்ற தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அந்த அறிக்கையின்படி, ரஜினி, அஜித், விஜய் ஆகியோரின் படங்களுக்கு முதல் வாரத்தில் 60% வசூலையும், சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி ஆகியோரின் படங்களுக்கு 55% வசூலையும், மற்ற நடிகர்களின் படங்களுக்கு 50% வசூலையும் அந்தப் படத்தை விநியோகம் செய்பவர்களுக்கு இவர்கள் தருவார்களாம். அந்த அறிக்கையின் முதல் பத்தியில், ‘மகிழ்ச்சியுடனும் வளர்ச்சியுடனும் வளர்ந்துவரும் வேளையில் இப்படி ஒரு முடிவை எடுத்திருப்பதாக’ திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
அந்த வரிகளைப் படிக்கும்போது, திரையரங்கு உரிமையாளர்கள் மகிழ்ச்சியாகவும் வளர்ச்சியாகவும் இருக்க, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்களை நசுக்க அவர்கள் முடிவெடுத்துவிட்டார்களோ என்ற அச்சம் எழுவதைத் தடுக்க முடியவில்லை.
இந்த விகிதாச்சார முறை மட்டும் அமலுக்கு வருமானால், ஏற்கெனவே மிகப்பெரிய நஷ்டத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிற தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் - விநியோகஸ்தர்கள் வர்க்கம், அடியோடு அழிந்து போவதை யாராலும் தடுக்க முடியாது.
இப்போது தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவரும் நிர்வாகிகளும் இல்லை என்றாலும், தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள ஒரு குழு இருக்கிறது. ஆகவே, திரையரங்கு உரிமையாளர்கள் புதிதாக எந்த முடிவை எடுத்தாலும், அதைப்பற்றி அந்தக் குழுவோடு கலந்து ஆலோசித்துவிட்டு, அதற்குப் பின்னர் அந்த முடிவுகளைப் பற்றி தெரியப்படுத்த வேண்டுகிறேன்.
தயாரிப்பாளர்களின் இந்த நியாயமான வேண்டுகோளை அறிவிப்பதுதான் முறையாக இருக்கும். இவை எல்லாவற்றையும் மீறி திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் செயல்பட்டால், இந்த முடிவுகளை எதிர்த்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்த வேண்டிய சூழ்நிலைக்குத் தயாரிப்பாளர்கள் தள்ளப்படுவார்கள்” என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் பாரதிராஜா.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT