Published : 10 May 2019 05:37 PM
Last Updated : 10 May 2019 05:37 PM
திரையுலகில் அறிமுகமாகி 17 ஆண்டுகள் ஆனதையொட்டி, நெகிழ்ச்சியுடன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் தனுஷ்
நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் மற்றும் பாடலாசிரியர் என பல துறைகளிலும் பணிபுரிந்து வருபவர் தனுஷ். இன்றுடன் (மே 10) தனுஷ் நாயகனாக அறிமுகமாகி 17 ஆண்டுகளாகின்றன. 2002-ம் ஆண்டு இதே தினத்தில் தான் அவர் நாயகனாக நடித்த முதல் படமான 'துள்ளுவதோ இளமை' வெளியானது.
17 ஆண்டுகள் ஆனதையொட்டி, தனுஷை அவரது ரசிகர்கள் சமூக வலைதளத்தில் கொண்டாடி வருகிறார்கள். பல்வேறு திரையுலக பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
இது தொடர்பாக தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “'துள்ளுவதோ இளமை' மே 10, 2002 ஆம் ஆண்டு வெளியானது. என் வாழ்க்கையை மொத்தமாக மாற்றிய நாள். அதற்குள் 17 வருடங்கள் முடிந்துவிட்டதா?
எதுவும் தெரியாத, நட்சத்திரமில்லை, ஒரு நடிகராகக் கூட தன்னிடம் திறமை இருக்கிறதா என்று புரியாத ஒரு இளம் சிறுவனை திறந்த மனதுடன் நீங்கள் ஏற்றுக்கொண்டது நேற்று நடந்ததைப் போல இருக்கிறது. எனது இந்த திரையுலக வாழ்க்கை என்ற பயணத்தை திரும்பிப் பார்க்கும்போது நீங்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு என் மனம் முழுவதும், நன்றியுணர்வு நிரம்புகிறது. நல்ல - கெட்ட நேரங்களிலும், வெற்றி - தோல்விகளிலும் நீங்கள் என்னுடம் நின்றுள்ளீர்கள்.
நன்றி, மிக்க நன்றி. நான் கச்சிதமான ஆள் கிடையாது. ஆனால் நீங்கள் என் மீது வைத்திருக்கும் நிபந்தனையில்லாத நம்பிக்கை, என்னை இன்னும் உத்வேகப்படுத்தி, என்னால் முடிந்த வரை ஒரு கச்சிதமான ஆளாக மாற முயற்சிக்க வைக்கிறது.
இந்த 17 வருடங்கள் பற்றி வந்துள்ள போஸ்டர்களும், என்னை வாழ்த்தும் வீடியோக்களையும் பார்க்கும்போது, அது என்னுள் ஊக்கத்தையும், நேர்மறை எண்ணத்தையும் நிரப்புகிறது. என்றும் எப்போதும் அன்பை மட்டுமே பரப்புவோம். அன்பை மட்டுமே. நம்மைப் போன்ற பலர் துணிந்து கனவு காணும் ஒரு உலகை உருவாக்குவோம். எனது நம்பிக்கைத் தூண்களுக்கு நன்றி” என்று தனுஷ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT