Published : 29 May 2019 06:24 PM
Last Updated : 29 May 2019 06:24 PM
தன்னுடைய அரசியல் இமேஜைக் கட்டியெழுப்பக் களமாக விஷால் நடிகர் சங்கத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார் என்று உதயா குற்றம் சாட்டியுள்ளார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல், ஜூன் 23-ம் தேதி நடைபெறும் என அறிவித்துள்ளார் தேர்தல் அதிகாரியாகப் பொறுப்பேற்றுள்ள ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன். டாக்டர் எம்ஜிஆர் ஜானகி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
இம்முறையும் தலைவர் பதவிக்கு நாசர், செயலாளர் பதவிக்கு விஷால், பொருளாளர் பதவிக்கு கார்த்தி, துணைத் தலைவர் பதவிக்கு கருணாஸ் ஆகியோர் போட்டியிடவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலை எதிர்த்துப் போட்டியிட உள்ளார் நடிகர் உதயா. இத்தனைக்கும் கடந்த தேர்தலில் விஷால் அணியில் இருந்தவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
‘விஷாலை எதிர்த்துப் போட்டியிட என்ன காரணம்?’ என ‘இந்து தமிழ் திசை’க்காக உதயாவிடம் கேட்டபோது, “தனிப்பட்ட முறையில் விஷால் மீது எனக்கு எந்தப் புகாரும் இல்லை. பொதுச் செயலாளராக விஷால் எந்த வேலையுமே செய்யவில்லை என்றுதான் நான் சொல்வேன். மற்றவர்கள் செய்த வேலைகளை, ‘விஷால் தலைமையிலான அணி, நான் தான் எல்லாவற்றையும் செய்தேன்’ என மீடியாக்களிடம் சொல்லி விளம்பரம் தேடிக் கொள்கிறாரே தவிர, விஷால் தனியாக எந்த வேலையும் செய்தது கிடையாது.
உதாரணமாக, ஏசிஎஸ், எம்.ஜி.ஆர். இன்ஜினீயரிங் கல்லூரிகளில், நடிகர் சங்க உறுப்பினர்களின் குழந்தைகளுக்கு இதுவரை 100 சீட் வாங்கிக் கொடுத்துள்ளேன். அதேபோல், உறுப்பினர்களின் அறுவை சிகிச்சைகளுக்கு, மருத்து, மாத்திரை தவிர மற்ற செலவுகளை இலவசமாக ஏற்பாடு செய்து தந்துள்ளேன். இவ்வளவையும் செய்த உதயா, ‘நான் தான் இதையெல்லாம் செய்தேன்’ என என்றைக்குமே சொன்னதில்லை. ஆனால், இன்றைக்கு அதை வெளியில் சொல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால், இதையெல்லாம் விஷால் செய்ததாகத்தான் வெளியில் தெரிகிறது.
நான் மட்டுமல்ல, நடிகர் சங்கத்தில் உள்ள பலரும் தனித்தனியாக இதுபோல் நிறைய நல்ல விஷயங்கள் செய்துள்ளனர். அவை எல்லாவற்றையுமே தான் செய்ததாக விஷால் சொல்லிக் கொள்கிறார். தன்னுடைய அரசியல் இமேஜைக் கட்டியெழுப்பக் களமாக விஷால் இதைப் பயன்படுத்திக் கொள்கிறார்.
நடிகர் சங்கம் மட்டுமல்ல, தயாரிப்பாளர் சங்கத்திலும் இதே நிலைதான். தயாரிப்பாளர் சங்கத்தில் அது வெட்டவெளிச்சமாகத் தெரிந்துவிட்டது. ஆனால், நடிகர் சங்கத்தில் அப்படி தெரியவில்லை. காரணம், நான் உட்பட பலர் தவறுகளை சரிபண்ணிக் கொடுத்தோம். இருந்தாலும், எந்த வேலையுமே செய்யாதவர் எப்படி பொதுச் செயலாளராக இருக்க முடியும்?
நானே இவ்வளவு உதவிகள் செய்கிறேன் என்றால், பொதுச் செயலாளரான விஷால் எவ்வளவு செய்ய வேண்டும்? நாடகக் கலைஞர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து கொடுப்பதோ, அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுப்பதோ இல்லை. ஊடகங்களுக்குப் பேட்டி கொடுப்பதோடு சரி” என்று பொங்கினார் உதயா.
‘நீங்கள் மட்டும் போட்டியிடப் போகிறீர்களா அல்லது உங்கள் தலைமையில் ஒரு அணி அமையுமா?’ என்ற கேள்விக்குப் பதிலளித்த உதயா, “எதுவாக இருந்தாலும் ஜூன் 2-ம் தேதிக்கு மேல்தான் தெரியும். அப்படியே ஒரு அணி அமைந்தாலும், தலைவர் மற்றும் பொருளாளர் தவிர்த்து, மற்ற பதவிகளுக்குத்தான் போட்டியிடுவோம். காரணம், இப்போதிருக்கும் தலைமை மீது எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.
நடிகர் சங்கக் கட்டிடத்தைக் கொண்டு வந்ததற்கு முக்கியக் காரணம் தலைவர் நாசர் சாரும், பொருளாளர் கார்த்தியும் என்றவர் தொடர்ந்து, “நடிகர் சங்கத்தின் நிர்வாகிகள் எல்லோருக்கும் விஷால் மீது மனவருத்தம் இருக்கிறது. ஆனால், ‘கூட்டுக் குடும்பமாக இருக்கிறோம். சேர்ந்தே செயல்படுவோம்’ என்ற மனநிலையில் மற்றவர்கள் உள்ளனர்.
நடிகர் சங்கத்தில் நடிகர்கள் நந்தா மற்றும் ரமணா ஆகிய இருவரின் தலையீடு அதிகமாக இருக்கிறது. மற்றவர்களின் மன வருத்தத்துக்கு இதுவும் ஒரு காரணம். மற்றவர்கள் என்னைப்போல் வெளிப்படையாகப் பேசத் தயங்குகின்றனர். ஆனால், எல்லாம் தெரிந்தும் நான் அவரை ஆதரித்தால், சங்க உறுப்பினர்கள் ஏமாறுவது போல் ஆகிவிடும். விஷாலைத் தவிர்த்து, ‘பாண்டவர் அணி’யில் உள்ள மற்றவர்கள் சிறப்பாகச் செயல்படுகின்றனர். எனவே, வீட்டை மொத்தமாக மாற்றச் சொல்லவில்லை. கொஞ்சம் மாற்றியமைக்கத்தான் சொல்கிறேன்” என்றார் ஆதங்கத்துடன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT