Published : 21 May 2019 03:12 PM
Last Updated : 21 May 2019 03:12 PM
விவேக் ஓபராய் மீம் தவறானது என பலரும் நினைத்த காரணம் ஏன்? என்று தனது ட்விட்டர் பக்கத்தில் கருணாகரன் விளக்கம் அளித்துள்ளார்.
மக்களவைத் தேர்தல் குறித்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள், கடந்த 19-ம் தேதி மாலை வெளியாகின. இந்தக் கணிப்புகளுடன் ஒப்பிட்டு, நடிகை ஐஸ்வர்யா ராய் குறித்த மீம் ஒன்றைத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார் விவேக் ஓபராய். இந்த மீம், ஐஸ்வர்யா ராயின் தனிமனித ஒழுக்கத்தைச் சீண்டிப் பார்க்கும் விதத்தில் இருந்தது.
ஐஸ்வர்யா ராயின் கடந்தகால தனிப்பட்ட வாழ்க்கையை மோசமாகச் சித்தரிக்கும் வகையில் இருந்ததாக, தேசிய மகளிர் ஆணையமும் கண்டனம் தெரிவித்து நோட்டீஸ் அனுப்பியது. இந்த மீம் குறித்து பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
இந்த சர்ச்சை தொடர்பாக விவேக் ஓபராய், “நான் செய்ததில் ஏதேனும் தவறு இருக்கிறதா? ஏதேனும் தவறாகச் சித்தரிக்கப்பட்டுள்ளதா? மோசமான படமாக இருக்கிறதா? தேர்தல் நேரத்தில் உருவாக்கப்பட்ட வித்தியாசமான இந்த மீம்ஸைப் பார்த்தவுடன் நான் சிரித்தேன்.
இந்த விஷயத்தில் நான் மன்னிப்பு கேட்பதில் எந்தத் தயக்கமும் இல்லை. மன்னிப்பு கேட்பதில் நான் வல்லுநர். ஆனால், நான் என்ன தவறு செய்தேன் என்பதை மட்டும் சொல்லிவிடுங்கள். மகாராஷ்டிரா மகளிர் ஆணையம், தேசிய மகளிர் ஆணையத்திடம் இருந்து நோட்டீஸை எதிர்பார்த்திருக்கிறேன். அந்த நோட்டீஸ் வந்தவுடன் அவர்கள் முன் நேரில் சென்று என் விளக்கத்தை அளிப்பேன். நான் ஏதேனும் தவறு செய்ததாக நினைக்கவில்லை” என்று பேட்டியளித்தார்.
விவேக் ஓபராயின் இந்த விளக்கத்தைக் குறிப்பிட்டு நடிகர் கருணாகரன், “அவரது பதிலிலும் ஒரு அர்த்தம் உள்ளது. அந்த மீம் தவறானது என நாம் நினைத்த காரணம், கிசுகிசுக்கள் மீதும், பொய்யான செய்திகள் மீதும் நமக்கிருக்கும் பார்வையால்தான். விவேக் ஓபராய் நிஜத்தை மட்டுமே பார்க்கிறார். நாம் உண்மையென கற்பனை செய்துகொள்ளும் விஷயங்களைப் பார்ப்பதில்லை” என தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
மீம் சர்ச்சை பெரிதானதைத் தொடர்ந்து மன்னிப்பு கேட்ட விவேக் ஓபராய், தனது மீம் ட்வீட்டை நீக்கியது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT