Last Updated : 21 May, 2019 06:39 PM

 

Published : 21 May 2019 06:39 PM
Last Updated : 21 May 2019 06:39 PM

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி உருவானது எப்படி?

விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணி உருவானது எப்படி? எனத் தகவல் வெளியாகியுள்ளது.

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு, சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

இப்படத்தைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பது உறுதியாகியுள்ளது. இக்கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியானபோது, பலரும் ஆச்சர்யப்பட்டனர். எப்படி இது சாத்தியமானது? என்ற கேள்வி பலருக்கும் எழுந்தது.

உண்மையில் அட்லீ படத்தின் படப்பிடிப்பு தொடங்கியவுடன், யாரெல்லாம் விஜய்யிடம் கதைசொல்ல வேண்டும் என்று அணுகியிருந்தார்களோ, அவர்களிடம் கதை கேட்கும் படலம் நடைபெற்றுள்ளது. பல இயக்குநர்கள்  சந்தோஷத்துடன் கதை கூறியுள்ளனர். முன்னணி இயக்குநர்கள் தொடங்கி, புது இயக்குநர்கள் வரை இதில் அடங்குவர். பல கதைகளை முதற்கட்ட அமர்விலேயே தவிர்த்துவிட்டார் விஜய்.

இதில், லோகேஷ் கனகராஜ் கதையைக் கேட்டவுடன், எவ்வித மாற்றமுமே சொல்லாமல் உடனே ஓகே சொல்லிவிட்டார் விஜய். அப்போது, தான் இயக்கியுள்ள 'கைதி' படத்தின் போஸ்டர்கள், புகைப்படங்கள் மற்றும் சிறு காட்சிகள் ஆகியவற்றைக் காட்டியுள்ளார் லோகேஷ் கனகராஜ்.

இதுவரை விஜய் நடித்த படங்களில் இருந்து, முழுக்க வித்தியாசமான கதைக்களம் கொண்ட படமாக இது இருக்கும் என்கிறார்கள். பிவி கம்பைன்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கவுள்ளது. இதில், தயாரிப்பு மேற்பார்வையாளராக லலித் குமார் மற்றும் ஜெகதீஷ் பணிபுரியவுள்ளனர்.

60 நாட்கள் மட்டுமே படப்பிடிப்பு, குறுகிய தயாரிப்பு என்றெல்லாம் தகவல்கள் வெளியாகியுள்ளன. அது உண்மையில்லை. இப்படத்துக்காக சுமார் 120 நாட்கள் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார் விஜய். பெரும்பாலான படப்பிடிப்பு சென்னையில்தான் நடைபெறவுள்ளது.

2020-ம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிடலாம் என இப்போதைக்குத் திட்டமிட்டுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x