Last Updated : 01 May, 2019 06:17 PM

 

Published : 01 May 2019 06:17 PM
Last Updated : 01 May 2019 06:17 PM

நண்பர் ஸ்ரீமன் உடனான நட்பு: இயக்குநர் சமுத்திரக்கனி வெளியிட்டுள்ள நெகிழ்ச்சி வீடியோ

நண்பர் ஸ்ரீமன் உடனான நட்பு குறித்து இயக்குநர் சமுத்திரக்கனி நெகிழ்ச்சியுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு இயக்குநர் சமுத்திரக்கனி  வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நடிகர் ஸ்ரீமன் தனது வாழ்க்கையில் எவ்வளவு முக்கியமான நண்பர் என்று பேசியுள்ளார்.

அந்த வீடியோ பதிவில் ஸ்ரீமன் குறித்து சமுத்திரக்கனி பேசியிருப்பதாவது:

அனைவருக்கும் எனது உழைப்பாளர் தின நல்வாழ்த்துகள். இன்றைக்கு எனக்கு தெரிந்த உழைப்பாளியைப் பற்றி பேசுவதில் அவ்வளவு சந்தோஷம். நான் சென்னை வந்து இறங்கியவுடன், எனக்கு கிடைத்த முதல் நண்பன். வழிகாட்டி என்று கூட சொல்லலாம்.

அவனோட பைக்கில் என்னை ஒவ்வொரு ஷுட்டிங் ஸ்பாட்டுக்காக கூட்டிட்டு போய் சினிமா இது தான் என்று கற்றுக் கொடுத்த நண்பன். ஒரு கட்டத்தில் நான் அப்படியே வளர ஆரம்பித்தவுடனே, சரி இனி நமக்கு இவன் தேவையில்லை என்று என்னைவிட்டு கடந்து வெகுதூரம் போய்விட்டான். என்னோட வெற்றியையும், உழைப்பையும் பார்த்து ரசித்த ஒரு நண்பன். அவன் தான் ஸ்ரீமன். பேசுறதுக்கே ரொம்ப சந்தோஷமா இருக்கு.

நான் இயக்குநராகப் போகிறேன் என்றவுடன் ஸ்ரீமனிடம் தான் கேட்டேன். நீ சினிமாவில் நடிச்சுட்டு இருக்க, ஆனால் நான் சின்னத்திரையில் ஒரு ப்ராஜக்ட் பண்றேன். அதில் நீ நடிக்கணும்டா என்று கேட்டேன். உடனே வர்றேன் மாமா என்று வந்து நடித்தேன். நான் முதன் முதலில் ஆக்‌ஷன் கட் சொன்னது ஸ்ரீமனுக்கு தான்.  இப்படி நிறைய சொல்லிட்டு போயிட்டே இருக்கலாம்.

இப்போது காஞ்சனா 3 பார்த்தேன். அப்படத்தைப் பற்றி என்ன விமர்சனம் வேண்டுமானாலும் இருக்கலாம். தியேட்டரிலேயே ஒரு மேஜிக் நடந்தது. என் குழந்தைகளே சத்தம் போட்டு சிரித்தார்கள். திரையரங்குகளே திருவிழா கோலம் போல் இருந்தது. அதில் ஸ்ரீமனின் நடிப்பைப் பார்த்து ஒரு இடத்தில் நின்றுவிட்டேன். ஸ்ரீமன் அடிச்ச கமெண்ட்டை நினைத்து நினைத்து சிரிச்சுக்கிட்டே இருக்கேன். படம் அது ஓடிட்டு இருக்கு. என்னோடு வந்தவர்கள் எல்லாம் அது போய் 20 நிமிஷன் ஆச்சுடா, இன்னும் ஏன் சிரிச்சுட்டு இருக்க என்று கேட்டார்கள். அது தான் பாதிப்பு.

அந்தளவுக்கு நடிப்பில் ஆழமாக வந்து நிற்கிற ஸ்ரீமனைப் பார்க்கும் போது, ரொம்ப சந்தோஷமா இருக்கு. இன்னும் நிறைய ஜெயிக்கணும். நான் முதலில் எழுதிய கதை 2 ஹீரோ சப்ஜெக்ட். அதில் ஸ்ரீமன் ஒரு ஹீரோ. அக்கதையை எடுத்துட்டுப் போய் சொல்லாத இடமே கிடையாது. அது நடக்கவே இல்லை. அக்கதை இன்னும் வைத்துள்ளேன். நான் படம் இயக்க ஆரம்பித்து, ஸ்ரீமனும் நானும் இணைந்து பணிபுரியவில்லை. அந்த நாளுக்காக நான் ஆவலோடு காத்திருக்கிறேன்.

'காஞ்சனா 3' பார்த்துவிட்டு போன் பண்ணி 'மச்சான். எங்கடா இருக்க' என்றேன். அம்மாவுக்கு உடம்பு சரியில்லைடா என்றான். உடனே போய் பார்த்துவிட்டு, அப்பாவை பார்க்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. 15 ஆண்டுகள் கழித்து மீண்டும் சந்திக்கும் போது, அதே அன்போடும் பேசினார் அப்பா. நான் முதன்முதலில் சென்னையில் பார்த்த குடும்பம், இன்னும் அப்படியே இருக்கும் என்பதில் பெருமை.

அண்ணி என்ற மெகா சீரியல் தொடங்கினேன். இந்த கேரக்டரை அறிமுகப்படுத்த ஒரு பவர்ஃபுல்லா ஒருத்தர் வேண்டும் என்று கே.பி.சார் கேட்டார். அப்பவும் நான் ஸ்ரீமன் என்றேன். அவர் சினிமாவில் பிஸியா இருக்கார், அவரெல்லாம் இதைச் செய்வாரா என்றார். ஒரு நிமிடம் என்று போனில் கேட்டேன். இதோ வர்றேன் மச்சான் என்றான். கே.பி சாரிடம் வர்றேன்னு சொல்லிட்டார் சார் என்றவுடன் நானே இயக்குகிறேன் என்றார். ஸ்ரீமன் நடிப்பதைப் பார்த்து, என்னைப் பார்த்து சந்தோஷப்படுறார். என் வாழ்க்கையில் அண்ணி என்ற மெகா சீரியல் மிகப்பெரிய வெற்றியடைந்தது. அதை ஆரம்பித்து வைத்ததும் ஸ்ரீமன் தான்.

ஒவ்வொரு படத்திலும் அவனைப் பார்ப்பது சந்தோஷமாக இருக்கும். ஒரு விஷயத்தை வடிவமைத்து இதற்குள் நீ இருக்கணும் என்று கொடுத்துவிட்டால், நீ எவ்வளவு ஆழமா அதற்குள் வேலை பார்ப்பாய் என்பது எனக்கு மட்டுமல்ல. தமிழ் திரையுலகில் இருக்கும் அனைத்து இயக்குநர்களூக்குமே தெரியும். உன் திறமைக்கான இடத்தை நீ இன்னும் அடையல. காஞ்சனா மாதிரி இன்னும் 100 வெற்றி திரைப்படங்கள் வரும். நீ ஆசைப்பட்ட மாதிரி விதவிதமான பெரிய கதாபாத்திரங்கள் நடித்து பெரிய ஆளாக வரணும். உன்னுடைய திறமைக்கு நீ அடைந்திருக்கும் இடம் பத்தாது. வேற வேற வேண்டும். கண்டிப்பாக அதை இறைவன் உனக்கு கொடுப்பார்.

இவ்வாறு சமுத்திரக்கனி பேசியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x