Published : 28 May 2019 03:46 PM
Last Updated : 28 May 2019 03:46 PM
திரையரங்கு உரிமையாளர்கள் அறிக்கையால் தொடங்கியுள்ள சர்ச்சைக்கு, தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் விளக்கம் அளித்துள்ளார்.
எப்போதுமே ஒவ்வொரு படம் வெளியாகும்போது, அப்பட நாயகனின் முந்தைய படத்தின் வசூல் நிலவரத்தை வைத்து வியாபாரம் தொடங்கப்படும். தயாரிப்பாளர்களிடம் இருந்து விநியோகஸ்தர்கள் வாங்கி, திரையரங்கு உரிமையாளர்களிடம் ஷேர் அடிப்படையில் ஒப்பந்தம் செய்து கொடுப்பார்கள். இப்படித்தான் ஒவ்வொரு படமும் வெளியாகிறது.
சமீபகாலமாக பெரும் விலை கொடுத்து வாங்கிய படங்கள், திரையரங்கு உரிமையாளர்களுக்கு நஷ்டத்தையே ஏற்படுத்தியுள்ளன. இதனால், புதிய நடைமுறைகளை அறிவுறுத்தி, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு திரையரங்க மற்றும் மல்டி ப்ளக்ஸ் உரிமையாளர்கள் சங்கம்.
அதில், “தமிழ்நாடு திரையரங்கு மற்றும் மல்டி ப்ளக்ஸ் உரிமையாளர்கள் சங்கத்தில், ஏப்ரல் 24-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், நாம் மகிழ்ச்சியுடனும் வளர்ச்சியுடனும் வளர்ந்துவரும் இவ்வேளையில், வரி விதிப்புடன் கூடிய விதிமுறைகளான பராமரிப்புச் செலவுகள் உயர்வு, சொத்து வரி உயர்வு, வேலையாட்கள் ஊதிய உயர்வு போன்றவை திரையரங்க நிர்வாக நடைமுறைக்குப் பெரும் பாரமாக இருந்து வருகின்றன. எனவே, அவற்றை மனதில் கொண்டு, இதனை எதிர்கொள்ளும் விதமாக நமது நிர்வாக நடைமுறையில் ஒரே நிலையான வழிமுறைகளைச் செயல்படுத்தும் வண்ணம் விநியோகஸ்தர்களுக்கான புதிய நடைமுறை இது.”
படம் வெளியாகும் முதல் வாரம்
எண் | நடிகர்கள் | A சென்டர் | மற்றவை |
1 | ரஜினி, அஜித், விஜய் | 60% | 65% |
2 | சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி | 55% | 60% |
3 | மற்ற நடிகர்கள் | 50% | 50% |
படம் வெளியாகும் இரண்டாவது வாரம்
எண் | நடிகர்கள் | A சென்டர் | மற்றவை |
1 | ரஜினி, அஜித், விஜய் | 55% | 60% |
2 | சூர்யா, ஜெயம் ரவி, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி | 50% | 55% |
3 | மற்ற நடிகர்கள் | 45% | 45% |
என்று கூறப்பட்டுள்ளது.
இப்பட்டியலில் விக்ரம், கார்த்தி உள்ளிட்ட பலர் நடிகர்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. இதனால், இவர்களுக்கு போதிய வியாபாரம் இல்லையா? என்ற கருத்தும் பரவத் தொடங்கியது. இந்த அறிக்கையின் பின்புலம் குறித்து தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர் மற்றும் மல்டி ப்ளக்ஸ் உரிமையாளர் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்ரமணியத்திடம் கேட்டபோது, “தயாரிப்பாளர்களும், படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களும் முன்னணி நடிகர்களுக்கு சம்பளத்தை அதிகப்படுத்திக் கொடுத்துவிட்டு, திரையரங்கு உரிமையாளர்களிடம் ஷேர் தொகையை அதிகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்கள். பிறகு எப்படித்தான் திரையரங்குகளை நடத்துவது? என்று சொல்லுங்கள். கேரளாவில் எந்தவொரு படத்துக்குமே 60% மேல் ஷேர் தொகை கிடையாது. அந்த நடைமுறையையே இங்கும் கொண்டு வரலாம் என்று நினைக்கிறோம்.
அந்த அறிக்கையைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று நாங்கள் கூறவில்லையே... இப்படிப் பண்ணலாம் என்று சொல்லியிருக்கிறோம், அவ்வளவுதான். ஷேர் தொகையை அதிகமாகக் கொடுத்தால் நாங்கள் ஒன்றும் சொல்லப் போவதில்லை. வியாபாரத்தை நெறிமுறைப்படுத்த வேண்டும் என நினைக்கிறோம். ஒரு அட்வைஸாக சொல்லியிருக்கிறோம். அனைத்து நடிகர்கள், இயக்குநர்களை ஒரே அறிக்கையில் போட்டுவிட முடியாது. ஆகையால், முக்கியமான நடிகர்கள் பெயரை மட்டும் போட்டுள்ளோம்” என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT