Published : 22 May 2019 12:46 PM
Last Updated : 22 May 2019 12:46 PM
‘திருமணம்’ படத்துக்கான பாராட்டு தொடர்பாக, ‘இறந்தபின் பாலூற்றி என்ன பயன்?’ என்று காட்டமாகக் கேள்வி எழுப்பியுள்ளார் சேரன்.
சேரன் இயக்கத்தில் இறுதியாக வெளியான படம் 'திருமணம்'. மார்ச் 1-ம் தேதி வெளியான இப்படத்தில், உமாபதி ராமையா, சுகன்யா, காவ்யா சுரேஷ், மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்ட பலர் நடித்தனர். விமர்சன ரீதியாக வரவேற்பு பெற்றாலும், வசூல் ரீதியாக சோபிக்கவில்லை.
தற்போது 'ராஜாவுக்கு செக்' படத்தில் நாயகனாக நடித்துக் கொண்டே, தனது அடுத்த இயக்கத்துக்கான கதையைத் தயார்செய்து வருகிறார் இயக்குநர் சேரன். மேலும், 'திருமணம்' படம் தொடர்பாக தொடர்ச்சியாக வரும் பாராட்டுகளுக்குப் பதிலளித்தும் வருகிறார்.
நேற்று (மே 21), 'படம் வெளியாகி திரையரங்குக்குப் போவதற்குள், வேறு படம் போட்டுவிடுகிறார்கள். இளைஞர்களைக் கவர மீண்டும் வெளியிட வேண்டும்' என்று சேரனின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு இயக்குநர் சேரன், “நீங்களெல்லாம் முதலில் பார்க்க வரவில்லை. ஆட்கள் வரவில்லை என தியேட்டர்காரர்கள் எடுத்துவிட்டனர்.
இப்போது வெளியிடலாம் என்றால் தியேட்டர்கள் கிடைக்கவில்லை. அதற்குள் பைரசியில் படம் வந்துவிட்டது. அதில் படம் பார்த்து எல்லாரும் கொண்டாடுகிறார்கள், சிறந்த படம் என. இறந்தபின் பாலூற்றி என்ன பயன்? இப்போது ஒவ்வொருவரும் ‘நல்ல படம்’ எனச் சொல்லும்போது, சந்தோஷத்தைவிட கோபம்தான் வருகிறது. பைரசி என்ற ஒன்று இருப்பதால்தானே, ‘அதில் வரும் பார்த்துக் கொள்ளலாம்’ என அலட்சியமாக இருக்கீங்க. எதை, எந்த நேரத்தில் செய்யவேண்டும் என்ற தெளிவு, சினிமாவில் தொடங்கி நாடுவரை நம்மிடம் இல்லை.
யார் மீதும் கோபமோ, வருத்தமோ இல்லை. இருக்கும் நிலையில் மாற்றம் வேண்டும். மக்களும் கொஞ்சம் தயாரிப்பாளர், இயக்குநர் வலியை உணரவேண்டும். ஏதாவது குரல் கொடுத்து, எங்காவது ஒரு மாற்றம் நிகழ்ந்துவிடாதா என்ற ஆதங்கம்” என்று கொந்தளித்துவிட்டார் சேரன்.
இந்த பதிலால், ட்விட்டரில் சேரனைப் பின்தொடர்பவர்கள் பலரும், அவரை சாடத் தொடங்கினர். இதனைத் தொடர்ந்து இன்று (மே 22) காலை தனது ட்விட்டர் பதிவில் இயக்குநர் சேரன், “தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் எதிர்பார்க்கிறோம். ஏன்? அவரவர் வேலை, தொழில், வாழ்க்கை முறையில் நிம்மதியான, செழிப்பான வாழ்க்கை அனைவருக்கும் வேண்டும் என்பதால். தலைவர்கள் மாறினால் அது நடக்காது. மக்களும் தன்னை நேர்மைப்படுத்திக் கொண்டு, சிலவற்றை விட்டுக்கொடுத்தால் மட்டுமே மாற்றம் சாத்தியம்.
சிலவற்றை நாம் புறந்தள்ளினால் ஒழிய, உண்மையான மாற்றத்தைக் காந்தியே வந்தாலும் காணமுடியாது. ஒவ்வொரு விஷயத்திலும் சிந்திக்க வேண்டும். அரசு, கல்விக்கு அவ்வளவு செலவு செய்கையில், தனியார் கல்விக்கு கொடுக்கும் முக்கியத்துவம் நம் அறியாமை. அரசு, கல்வியின் தரத்தை மேம்படுத்தி, அனைவரும் அதைப் பின்பற்றுதல்.
அது உதாரணம். எல்லாத்துறைகளிலும் யாரும் நஷ்டப்படாமல் நாம் எப்படி வாழ்வது என்ற அக்கறை, சிந்தனை மிகமிக அவசியம். அப்போதுதான் மாற்றம் நோக்கி நகரமுடியும். திரைத்துறையில் உள்ள பிரச்சினைகள். அதைக்களைய மக்களும் திரைத்துறையும் அரசும் ஒத்துழைக்க வேண்டும் அந்த அடிப்படையில்தான் நேற்று விவாதித்தது.
நான் மட்டும் வாழவேண்டும் என்ற அடிப்படையில் அல்ல, எல்லோரும் வாழ நினைப்பதே மாற்றம். சமூக மாற்றத்துக்குக் குரல் கொடுக்கும் முக்கியஸ்தர்கள், முதலில் தாங்கள் சார்ந்த தொழிலில் எல்லோரும் வாழ்வதற்கான மாற்றத்தை ஏற்படுத்திக் காண்பித்துவிட்டு, அதை உதாரணமாக்கி மக்களுக்குச் சொல்லலாம், எந்தத் துறையிலும்.
அப்படி நினைக்காத தலைவர்களாலும் மக்களாலும், இந்த நாடு எல்லாப் பிரச்சினைகளிலும் இருந்து மீண்டு மாற்றம் கண்டுவிடும் என்று நம்புவது பொய். எல்லோரும் வாழ நினைக்கும்போது, கோடிகள் லட்சங்களாகும். அப்போது தயாரிப்பு செலவு குறையும். டிக்கெட் விலையும் குறையும். தியேட்டரில் மற்ற விலைகளும் குறையும்.
எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலைவேண்டும். இதை எழுதுவதும் படிப்பதும் எளிது, இதை வாழ்வில் கொண்டுவருவது கடினம். இதைக் கொண்டுவர எல்லோரும் முயன்றால் அதுவே ஜனநாயகம், அதுவே சோசலிஸம், அதுவே மாற்றம்” என்று தெரிவித்துள்ளார் சேரன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT