Last Updated : 10 May, 2019 05:02 PM

 

Published : 10 May 2019 05:02 PM
Last Updated : 10 May 2019 05:02 PM

முதல் பார்வை: கீ

செல்போன், கணினிக்குள் அத்துமீறி நுழையும் ஹேக்கர்களை சாதுர்யமாகக் கண்டுபிடிக்கும் இளைஞனின் கதையே 'கீ'.

கல்லூரி படிக்கும் ஜீவாவுக்கு ஹேக் செய்வது என்றால் அல்வா சாப்பிடுவது மாதிரி. பெண்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக அவர்களின் செல்போனை ஹேக் செய்து விளையாடுகிறார். இந்த சூழலில் சென்னையில் சில தற்கொலைகளும், சில விபத்துகளும் சென்னையில் அடுத்தடுத்து திடீரென்று நிகழ்கின்றன. இதற்கெல்லாம் காரணம் ஹேக் செய்யும் கும்பல்தான் என்பதை, தன் தந்தைக்கு நேரும் விபத்துக்குப் பிறகே ஜீவா கண்டுபிடிக்கிறார். தோழியின் மரணத்துக்கும் அந்தக் கும்பலே காரணம் என்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறார். 

அந்த ஹேக்கிங் கும்பலைத் தேடி கோபமாகப் புறப்படுகிறார். யார் அந்தக் கும்பல்? ஏன் ஜீவாவை டார்கெட் செய்கிறார்கள்? அந்தக் கும்பலிடம் சிக்கிய காதலியை ஜீவா மீட்க முடிந்ததா? போன்ற கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது திரைக்கதை.

தொழில்நுட்ப வளர்ச்சியால் வரும் ஆபத்துகளின் எல்லைகளை அப்படியே பதிவு செய்திருக்கிறார் அறிமுக இயக்குநர் காளீஸ். ஆனால், அதற்காக அவர் எடுத்துக்கொண்ட நேரமும், களமும், பயன்படுத்தப்பட்ட கதாபாத்திரங்களும் அதிகம் என்றுதான் சொல்ல வேண்டும்.

ஜீவா வழக்கமான ஹீரோவுக்கான பங்களிப்பைக் குறையில்லாமல் கொடுத்துள்ளார். சில காட்சிகளில் காமெடியாக நடிக்கிறாரா, சீரியஸாக நடிக்கிறாரா என்று கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு ஒரே மாதிரி நடித்துள்ளார்.  அம்மாவும் அப்பாவும் சண்டையிடும்போது பாசத்தை வெளிக்காட்டுகிறேன் என்று ஒரு சொட்டுக் கண்ணீர் விடுவதெல்லாம் படு செயற்கை.  ஹேக் செய்யும் கும்பலைத் தேடும் பரபர பயணத்தில் கவனிக்க வைக்கிறார்.

நிக்கி கல்ராணி படத்தில் எந்த கவனத்தையும் ஏற்படுத்தவில்லை. சில குட்டிப்பசங்களுடன் சேர்ந்து காமெடி என்கிற வகையில் கடுப்பேத்துகிறார். போனுக்காக செய்யும் அலப்பறை, கல்லூரி முதல்வரிடம் மாட்டி விடுவது என கதாநாயகிக்கான தொன்றுதொட்டு வரும் இலக்கணத்தை மீறாமல் வந்து போகிறார்.

அனைகாவுக்கு முக்கியக் கதாபாத்திரம். ஆனால், அவரின்  நடிப்பு போதாமையை வெளிப்படுத்துகிறது.ஆர்.ஜே.பாலாஜி சில இடங்களில் மட்டும் சிரிக்க வைக்கிறார்.

ராஜேந்திர பிரசாத் திடீரென்று உணர்ச்சிவசப்படுவதும், திடீரென்று நண்பனைப் போலப் பேசுவதுமாக அந்தக் கேரக்டருக்கான பலத்தையும் பலவீனத்தையும் சேர்த்தே சுமந்திருக்கிறார். சுஹாசினிக்கு படத்தில் முக்கியத்துவம் இல்லை. நடிக்கக் கிடைத்த ஒரே காட்சியிலும் கோட்டை விட்டுவிட்டார். மனோபாலா, மீரா கிருஷ்ணன் ஆகியோர் படத்தில் இருக்கிறார்கள்.

மூளை பலம் பொருந்திய வில்லனாக கோவிந்த் பத்மசூர்யா சிறப்பாக நடித்துள்ளார். ஜீவா- கோவிந்த் மோதலில் சுவாரஸ்யத்தை வரவழைப்பதில் கோவிந்தின் நடிப்பு பளிச். ஆனால், அந்தப் பதற்றத்தையும் பயத்தையும் இறுதிவரை தக்கவைக்காமல் தத்துவார்த்தமாகப் பேசுவது கதாபாத்திரத்தின் சரிவு.

அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவும் விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும் படத்துக்கு வலு சேர்க்கின்றன.

நாயகியின் அறிமுகம், நாயகன் - நாயகி சந்திப்பு, நாயகன் - அனைகா சந்திப்பு என ஏகப்பட்ட துண்டு துண்டான காட்சிகள் படத்தில் வருகின்றன.  அடுத்தடுத்து வர வேண்டிய காட்சிகளும் 10 கிலோ மீட்டர் தாண்டிப் போய் யு டர்ன் அடித்து வருவதைப் போல தேவையில்லாமல் இழுவையாக நீள்வது சோர்வை வரவழைக்கிறது.  மிகப்பெரிய விபத்து நடந்தும் அதைக் கண்டுகொள்ளாமல் ஜீவா செல்வது லாஜிக் இடறல். 

ஜீவா நிலைமை புரிந்து உண்மையை தேடிச் செல்வதெல்லாம் தாமதமான முடிவு. வில்லனுக்கான இலக்கு குறித்து கட்டக் கடைசியில் சொல்வதெல்லாம் ஏற்புடையதாக இல்லை. அவர் யார் என்பதையும் முழுமையாகப் பதிவு செய்யவில்லை. டெக்னாலஜி என்ற பெயரில் எல்லாவற்றையும் பூசி நம்பவைக்கப் பார்க்கிறார்கள். ஆனால், அதில் நிறைய மிஸ்ஸிங். குழந்தைகளை வைத்தே ஆபாசம், வன்முறை போன்றவற்றைத் திணித்ததற்கு பலத்த கண்டனங்கள்.

டெக்னாலஜியின் ஆபத்து குறித்த அக்கறையை சுட்டிக்காட்டிய விதத்தில் மட்டும் இயக்குநரைப் பாராட்டலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x