Published : 25 Apr 2019 06:55 PM
Last Updated : 25 Apr 2019 06:55 PM
பிரதமர் மோடியைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியையும் தற்போது கடுமையாக சாடியுள்ளார் சித்தார்த்.
மக்களவைத் தேர்தலையொட்டி நாடு முழுவதும் பல்வேறு தலைவர்கள் தீவிரமான தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 18-ம் தேதி முடிவுற்றுள்ளது.
இந்தத் தேர்தல் பிரச்சாரத்தில் பல்வேறு தலைவர்களின் பேச்சை கடுமையாக சாடி அவ்வப்போது தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து வந்தார் நடிகர் சித்தார்த். அதில் பிரதமர் மோடியின் பேச்சைச் சாடியே பல ட்வீட்கள் இடம்பெற்றிருந்தது.
தற்போது முதல் முறையாக காங்கிரஸ் கட்சியையும், அதன் வேட்பாளர்களையும் கடுமையாக சாடியுள்ளார் சித்தார்த். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “காங்கிரஸ் கட்சியும், அதன் தேர்தலுக்கான உத்திகளும் என்னை தர்மசங்கடமான சூழலுக்கு தள்ளுகின்றன.
60 ஆண்டு காலமாக ஏமாற்றம் மட்டுமே தந்த கட்சி இப்போது உதவாக்கரை எதிர்க்கட்சி என்பதற்கு பரிசும் பெற்றிருக்கிறது. பாஜகவுக்கு தேர்தல் பிரச்சாரத்தை எப்படி முன்னெடுப்பது என்றும் தேர்தல் வெற்றியை சாத்தியமாக்குவதும் நன்றாகவே தெரிந்திருக்கிறது. களத்தில் இப்போது போட்டியே இல்லை என்றுதான் சொல்வேன்.
காங்கிரஸ் நிறுத்தும் வேட்பாளர்களுக்கும் அந்தந்த தொகுதிகளுக்கும் சம்பந்தமே இருப்பதாகத் தெரியவில்லை. தேசிய அளவிலான அதிகார அரசியல்தான் எல்லாவற்றை முடிவு செய்கின்றன. தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் ஓட்டுக்கு காசு என்ற அருவருக்கத்தக்க உத்திகளைக் கையாண்டு இன்னும் மோசமான நிலையில் காங்கிரஸ் நிற்கிறது.
இங்கு ஒட்டுமொத்த அமைப்பே உடைந்த நிலையில் இருக்கிறது. வேட்பாளரின் பெயரே கூட தெரியாமல் எத்தனை பேர் வாக்களித்துள்ளார்கள் தெரியுமா? இப்படி வாக்களிப்பது ஜனநாயகத்துக்கு நல்லது அல்ல. நாம் அனைவரும் காங்கிரஸ் அல்லது பாஜகவுக்கு வாக்களிக்கவே பழக்கப்படுத்தப்பட்டிருக்கிறோம். இது உண்மையில் சோர்வைத் தருகிறது.
நீங்கள் வாக்களிக்கும்போது ஒரு தனிப்பட்ட நபரைப் பார்த்து வாக்களியுங்கள். அந்த வேட்பாளரால் உங்கள் தொகுதிக்கு என்ன செய்ய இயலும் என்பதை அறிந்து வாக்களியுங்கள். உயர்மட்டத்தில் இருக்கும் கேள்விகளுக்கு அப்பாற்பட்ட அதிகாரம்தான் இந்தியாவில் பல்வேறு பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது.
இவ்வாறு சித்தார்த் பதிவிட்டுள்ளார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT