Published : 02 Apr 2019 10:00 AM
Last Updated : 02 Apr 2019 10:00 AM
முள்ளும் மலரும் படத்துக்கும் கமலுக்கும் சம்பந்தமே இல்லையே என்று பலரும் நினைக்கலாம். ஆனால் அந்தத் தொடர்பு குறித்து இயக்குநர் மகேந்திரன் சொன்னதுதான் ஹைலைட்.
கமலின் பிறந்தநாள் இன்று. இந்த வேளையில் இதைச் சொல்லும் போது, கமலின் உன்னதம் இன்னும் புரியும்.
இயக்குநர் மகேந்திரன் சொன்னது என்ன?
‘’முள்ளும் மலரும் படத்துக்கு முன்னாடி வசனகர்த்தாவா சினிமால அறிமுகம். நிறைய படங்கள் பண்ணினேன். ஒருகட்டத்துல சினிமாவே வேணாம்னு முடிவு பண்ணினேன். அப்போ ஆழ்வார்பேட்டைல இருக்கிற கமல் சார் வீட்டுக்கு அடிக்கடி போய் பேசிட்டிருப்போம். அப்ப அவர் நடிச்ச மலையாளப் படத்தோட தமிழ் டப் படத்துக்கு வசனம் எழுதச் சொன்னார்.
அப்புறம் ஆனந்தி பிலிம்ஸ் வேணுச் செட்டியார்கிட்ட என்னை அனுப்பினார். அவர் தயாரிப்புல நான் டைரக்ட் பண்றதா முடிவாச்சு. அதுதான் முள்ளும் மலரும்.
படம் ஆரம்பிச்சதும் கமல் சார்கிட்ட போனேன். எனக்கு ஏத்த மாதிரி, கேமிராமேன் அமையலன்னு சொல்லிப் புலம்பினேன். அடுத்தநாளே கூப்பிட்டு விட்டார். ’இவர் உங்க டேஸ்ட்டுக்கு சரியா வருவாரு’ன்னு கமல் அறிமுகப்படுத்தி வைச்சவர்தான் பாலுமகேந்திரா. கமலோட உதவிகள் இதோடு முடிஞ்சிடலை.
ஒருவழியா படத்தை எல்லாம் எடுத்து முடிச்சாச்சு. சின்னதா ஒரு பேட்ச் அப் ஒர்க் பண்ணனும்னு தோணுச்சு. ஒரேயொரு சீன் எடுத்து சேர்த்தா சரியா இருக்கும்னு நினைச்சேன். ஆனா வேணு செட்டியார் இதுக்குமேல ஒரு சீன் கூட எடுக்க செலவு பண்ணமாட்டேன்னு சொல்லிட்டார். கறாரா சொல்லிட்டார். ஆனா அந்த லீட் சீன் இருந்தாத்தான், செந்தாழம்பூவே பாட்டை பயன்படுத்த முடியும். அந்தப் பாட்டை நீங்க பயன்படுத்துங்க பயன்படுத்தாம் விடுங்க. அதைப்பத்தி எனக்கொன்னும் தெரியாது. ஆனா இதுக்கு மேல செலவு பண்ணமாட்டேன்’னு உறுதியா இருந்தார்.
இதையெல்லாம் ஆழ்வார்பேட்டை வீட்டுல பேசிட்டிருக்கும் போது யதார்த்தமா கமல்கிட்ட சொன்னேன். உடனே மாடிக்குப் போனார் கமல். வேணு செட்டியார்கிட்ட பேசினார். என் தரப்பு விஷயங்களின் நியாயங்களைச் சொன்னார். ஆனா அவர் கேக்கவே இல்ல.
அப்ப கமல், ‘அப்படீன்னா பரவாயில்ல செட்டியார். அந்த ஒரு சீனுக்கு என்ன செலவோ அதை நான் தரேன். அந்த செலவை நான் ஏத்துக்கறேன்’ன்னு சொன்னார் கமல். மறுநாளே அந்தக் காட்சி எடுக்கப்பட்டது.
அன்னிக்கி முள்ளும் மலரும் படத்துக்கு கமல் இந்த அளவுக்கு எனக்கு ஹெல்ப் பண்ணலைன்னா, அதுக்குப் பிறகு நான் டைரக்டராவே ஆகியிருக்கமாட்டேன். என்னைப் பொருத்தவரை கமல், மகா கலைஞன். மகா மனிதன்’
இப்படி இயக்குநர் மகேந்திரன் கமல்ஹாசனை இன்றைக்கும் புகழ்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார். ஆனாலும் கமலை வைத்து இதுவரை மகேந்திரன் இயக்கியதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT