Last Updated : 04 Apr, 2019 03:34 PM

 

Published : 04 Apr 2019 03:34 PM
Last Updated : 04 Apr 2019 03:34 PM

தேர்தல் நிறைவுறட்டும்: குடும்பத்தினர் தொடர்பான சர்ச்சைக்கு நாசர் விளக்கம்

தேர்தல் நிறைவுறட்டும் என்று தன் குடும்பத்தினர் தொடர்பான சர்ச்சைக்கு நாசர் விளகம் அளித்துள்ளார்.

கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சியிலிருந்து மத்திய சென்னை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் நாசர் மனைவி கமீலா. தற்போது கமீலா நாசர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக நாசரின் தம்பி ஜவஹர் சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, “நாசர் மிகவும் கீழ்த்தரமாக நடந்து கொள்கிறார். இதற்கு எல்லாம் காரணம் கமீலாதான். எங்கள் குடும்பத்தை கண்டந்துண்டமாக்கியது கமீலாதான். நாசர் ஒரு அப்பாவி. அவருக்கு முழு விஷயமும் தெரியாது. நாசர் ஷூட்டிங் சென்றுவிடுவார். கமீலாதான் அவருக்கு மேனேஜர்.

அவர் உங்க அம்மா வீட்டுக்கு போங்க, அவங்களை கவனித்து கொள்ளுங்கள் என்று சொல்லியிருக்க வேண்டும். ஆனால் சொல்லவில்லை. கமல் கட்சியில் மத்திய சென்னை வேட்பாளராக கமீலா அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் நாட்டுக்கு என்ன செய்து விடுவார். மனதில் கொஞ்சமாவது இரக்க குணம் வேண்டும். அது கமீலாவிடம் உள்ளதா? மக்கள் நல்ல சிந்தித்து வாக்களிக்க வேண்டும்” என கமீலா நாசர் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார். இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விவகாரம் தொடர்பாக நாசர் எந்தவொரு கருத்துமே தெரிவிக்காமல் இருந்தார்.

தற்போது இது தொடர்பாக நாசர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

''என்னை அறிந்தோர் புரிந்தோர் எல்லோருக்கும் என் வணக்கங்கள். சமீபகாலமாக என் குடும்பம்சார் பிரச்சினைகள் எல்லா ஊடகங்களிலும் வந்து கொண்டிருக்கின்றன. கமீலா நாசருக்கு 'ஓட்டுப் போட்டுவிடாதீர்கள்' என்ற ஒரு செய்தி கடத்தவே ஒரு குடும்பத்தை வீதிக்கு இழுப்பது கேவலம் என்று கருதுகிறேன். இதற்குப் பின்னால் ஆதாயம் பெறும் அரசியல் வித்தகர்கள் பின் நின்று ஆட்டுவிக்கிறார்கள் என்று நான் எண்ணுவது இயற்கையானது.

நாசரின் நிழலின் கீழ் வளர்ந்தவர் அல்ல கமீலா. என்னைப் போலவே அவருக்கான தனித்துவம், தனித்திறன் இருக்கிறது.

நான், அல்லது நாங்கள் ஒன்றும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டை என் 40 வருட வாழ்க்கை உங்களுக்குச் சொல்ல வேண்டும். அதற்கான தருணம் இதுவல்ல. ஆனால், நான் விளக்குவேன். உரிய நேரத்தில் உரியவர்களுக்கு செய்ய வேண்டியது செய்யப்பட்டது. குடும்பத்தில் ஒருவருடைய பலமான தூண்டுதல் பேரிலேயே என்னுடைய கடமை தடை செய்யப்பட்டது. அதை மீறியும் என் கடமைகளை நிறைவேற்றிக் கொண்டுதான் இருக்கிறேன்.

பல விஷயங்கள் மறைக்கப்பட்டு, நடந்த சில விஷயங்கள் திரிக்கப்பட்டு, வலு சேர்க்க சிலவற்றை புனையப்பட்டு, இச்சகதி எங்கள் மேல் வீசப்பட்டிருக்கிறது.

வேட்பாளர் ஒருவர் மீது சுமத்துவதற்கு பழி ஒன்றும் கிடைக்காத போது வீசப்பட்ட சகதி எங்கள் பொது வாழ்க்கைக்கு கிடைத்த பரிசென்றே கருதுகிறேன். தேர்தலை முன் வைத்து வீசப்பட்ட இச்சகதி தேர்தல் வரை எங்களே மீதே கிடந்து நாறட்டும். என்ன நடந்தது என்று சொல்ல வேண்டிய கட்டாயத்தை நான் உணரவே செய்கிறேன்.

தேர்தல் நிறைவுறட்டும், நான் கமீலாவும் வேறு கிரகத்திற்கு பறந்து செல்லப் போவதில்லை. எதிர்கொள்ள தின்மையும் இருக்கிறது. தெளிவும் இருக்கிறது. இப்போதைக்கு இவ்வளவே''.

இவ்வாறு நாசர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x