Last Updated : 13 Apr, 2019 07:59 PM

 

Published : 13 Apr 2019 07:59 PM
Last Updated : 13 Apr 2019 07:59 PM

கஷ்டப்படுபவர்களுக்கு எப்போதும் உதவ வேண்டும் என்ற மனப்பான்மை கொண்டவர் ஜே.கே.ரித்தீஷ்: நடிகர் சங்கம் இரங்கல்

கஷ்டப்படுபவர்களுக்கும் எப்போதும் உதவி செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை கொண்டவர் ஜே.கே.ரித்தீஷ் என்று தென்னிந்திய நடிகர் சங்கம் இரங்கல் தெரிவித்துள்ளது.

முகவை குமார் என்ற இயற்பெயர் கொண்டவர் ஜே.கே.ரித்தீஷ்(46). திமுக முன்னாள் அமைச்சர் சுப.தங்கவேலனின் பேரனான இவர் 2009-ம் ஆண்டு ராமநாதபுரம் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு எம்.பி. ஆனார். ஆனால், சில காலத்துக்குப் பின் அதிமுகவில் இணைந்தார். திரையுலகிலும் சில படங்கள் நாயகனாக நடித்துள்ளார். நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணியின் வெற்றிக்காக பெரிதும் உழைத்தவர். தற்போது விஷாலுக்கு எதிரான அணியில் இருந்து வருகிறார்.

இந்நிலையில், அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக இன்று (ஏப்ரல் 13) காலை பிரச்சாரத்தில் ஈடுபட்ட போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

ஜே.கே.ரித்தீஷின் மறைவு அரசியல் வட்டாரத்தில் மட்டுமன்றி, திரையுலகிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

''நடிகரும், முன்னாள் ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் உறுப்பினருமான ஜே.கே.ரித்தீஷ் ( எ ) சிவகுமார் காலமானார் என்ற செய்தி மிகவும் அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. அவர் அரசியலிலும், திரைத்துறையில்  நடிகராகவும், திரைப்பட தயாரிப்பாளராகவும் பன்முகம் கொண்டவர்.

ஜே.கே.ரித்தீஷ் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும், கஷ்டப்படுபவர்களுக்கும் எப்போதும் உதவி செய்ய வேண்டும் என்ற மனப்பான்மை கொண்டவர்.

அவரது மறைவு தென்னிந்திய நடிகர் சங்கத்தின் நிர்வாகிகளுக்கும், நடிகர் சங்க உறுப்பினர்களுக்கும் பெரிய இழப்பாகும். அவரது இழப்பால் மீளாத் துயரத்தில் ஆழ்ந்துள்ள  குடும்பத்தினர்கள் , உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது. அன்னாரது ஆத்மா சாந்தி அடைய பிராத்திக்கிறோம்''.

இவ்வாறு தென்னிந்திய நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x