Published : 23 Apr 2019 02:11 PM
Last Updated : 23 Apr 2019 02:11 PM
ஆபாச வசனங்கள் தொடர்பாக பத்திரிகையாளர்கள் எழுப்பிய சராமரி கேள்விகளுக்கு, 'ஆட்டோ சங்கர்' குழு மழுப்பலாக பதிலளித்து நழுவிக் கொண்டது.
டிரைடன்ட் ஆர்ட்ஸ் டிஜிட்டல், பேபி ஷூ புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், ரங்கா இயக்கத்தில் உருவாகியுள்ளது 'ஆட்டோ சங்கர்' இணையத் தொடர். 1980-களில் தமிழகத்தில் கொலை, கொள்ளை, பாலியல் பலாத்காரம் உள்ளிட்ட குற்றங்களில் கைதாகி தூக்கிலிடப்பட்ட ஆட்டோ சங்கரின் வாழ்க்கை கதையோடு கொஞ்சம் கற்பனையை கலந்து இந்த இணையத் தொடரை உருவாக்கியுள்ளனர்.
பத்து வாரம் ஜீ மொபைல் செயலில் ஒளிபரப்பாகவுள்ளது. இதில் சரத் அப்பாணி, செல்வபாண்டியன், ராஜேஷ் தேவ், பிரவீன், அகஸ்டின், வசுதா, ஸ்வயம், அர்ஜுன், நிமேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த இணையத் தொடருக்கான பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் இணையத் தொடர் குழுவினர் ஒட்டுமொத்தமாக கலந்து கொண்டனர். முதல் 2 வாரத்துக்கான தொடர் பத்திரிகையாளர்களுக்கு ஒளிபரப்பப்பட்டது.
தணிக்கை கிடையாது என்பதால் முழுக்க ஆபாச வசனங்கள், ஆபாசக் காட்சிகளோடு அவை அமைந்திருந்தது. இதனால், அச்சந்திப்பில் இருந்த பெண் பத்திரிகையாளர்கள் பலரும் பாதியிலே வெளியேறினார்கள். அந்த ஒளிபரப்பு முடிந்தவுடன், இணையத் தொடர் குழுவினரிடம் பத்திரிகையாளர்கள் சராமரியாக கேள்விகள் எழுப்பினார்கள்.
தணிக்கை இல்லையென்றால் என்ன வேண்டுமானாலும் எடுப்பீர்களா, இப்படி ஆபாச வசனங்கள் இதுவரை எந்தவொரு படத்திலுமே வந்ததில்லை என்று கடுமையாக சாடினார்கள்.
இவற்றுக்கு பதிலளிக்கும் விதமாக தயாரிப்பாளர்களில் ஒருவரான ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சா பேசியதாவது:
''அப்போது மட்டுமல்ல, இப்போது கூட இப்படித்தான் பேசுகிறார்கள் என்பது தான் எங்களது எண்ணம். சமீபத்தில் கூட ஒரு போலீஸ் வழக்கு எனக்குத் தெரியும். அப்போது, இப்போது என்று எனக்குத் தெரியவில்லை. மாணவர்கள் மத்தியில் இது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது உண்மை தான்.
இது ஒரு மொபைல் செயலிக்காக உருவாக்கப்பட்டது. இதை யார் வேண்டுமானாலும் பார்க்க முடியாது. இந்தச் செயலிக்குள் சென்று பார்க்க வேண்டுமானால், க்ரெடிட் கார்டு மூலமாக பணம் கட்ட வேண்டும். க்ரெடிட் கார்ட் இப்போது 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு கொடுக்க மாட்டார்கள். 18 வயதைத் தாண்டியவர்கள் மட்டுமே இதைப் பார்க்க முடியும். இதனை நீங்கள் 10 எபிசோட்களும் பார்த்தால் மட்டுமே புரியும்.
முக்கியமாக, 'ஆட்டோ சங்கர்' விஷயத்தில் சம்பந்தப்பட்டு உயிருடன் இருப்பவர்கள் பெயரை மட்டும் உபயோகிக்க வேண்டாம் என்பது தான் முடிவு. நிஜப் பெயர்களும் வரும், இதற்காக சம்பந்தப்பட்டவர்களிடம் சான்றிதழ் பெற்று தான் உபயோகப்படுத்தியுள்ளோம். இதற்காக ஒரு பெரிய குழுவே பணிபுரிந்திருக்கிறது''.
இவ்வாறு மனோஜ் பரமஹம்சா பேசினார்.
மேலும், 'இப்படியொரு பிரச்சினை வரும் என்று தான் திரையிட வேண்டாம் என்று கூறினேன்' எனவும் மனோஜ் பரமஹம்சா தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT