Published : 21 Apr 2019 11:37 AM
Last Updated : 21 Apr 2019 11:37 AM
’’காளியை விட பெட்டரான கேரக்டரில் ரஜினி சார் இன்னும் நடிக்கவில்லை. ‘உதிரிப்பூக்கள்’ விஜயன் போல ஒரு கொடூரமான வில்லன் இதுவரை தமிழ் சினிமாவில் வரவில்லை’’ என்று இயக்குநர் வசந்தபாலன் பெருமிதத்துடன் பேசினார்.
இயக்குநர் மகேந்திரனுக்கு தென்னிந்தியத் திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் சார்பில், நினைவாஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.
இதில், இயக்குநர் வசந்தபாலன் கலந்துகொண்டு பேசியதாவது:
மகேந்திரன் சார் படங்களைப் பார்க்கும் போது, இப்போதும் மாறாத அதே தன்மையை உணரமுடிந்தது. மகேந்திரன் சார் இறந்த அன்றைய இரவில், ‘முள்ளும் மலரும்’ படத்தைத் திரும்பவும் பார்த்தேன். அந்தக் காளி பாத்திரம் இன்னும் வெகுவாகத் தாக்கத்தை ஏற்படுத்தியது.
படத்தின் தொடக்கத்தில், சிறுவனாக இருக்கும் காளி, கழைக்கூத்தாடி கொட்டு வாசிப்பார். தங்கை ஒரு மூங்கில் கழியின் உச்சியில் படுத்திருப்பார். அப்போது கொட்டு அடிப்பதே பின்னணி இசையாக இருக்கும்.
அதன் பிறகு க்ளைமாக்ஸ் காட்சியில், ரஜினி அப்படியே நிற்பார். ஷோபா, சரத்பாபு எல்லோரும் அவரைக் கடந்து செல்வார்கள். எந்த வசனமும் இருக்காது. அந்த நேரத்தில், அந்தப் பின்னணி இசை மீண்டும் அங்கே வரும். அந்த இடத்தை, மகேந்திரன் சார் நினைத்திருந்தால், ஆயிரம் வசனங்களால் பூர்த்தியாக்கியிருக்கமுடியும். ஆனால் ‘சைலண்ஸ்’ மட்டுமே கொடுத்திருப்பார். பின்னணி இசை மட்டுமே இருக்கும். ஷோபா அங்கிருந்து ஓடிவந்து ரஜினியை கட்டிக்கொள்வார்.
படம் வெளியாகி நாற்பது வருடங்களாகிவிட்டன. இப்படி பழைய படங்களை மீண்டும் இப்போது பார்க்கும் போது, நிறைய குறைகள் தெரியும். உலக சினிமாக்களைப் பார்க்கும்போது கூட குறைகள் தெரியும். ஆனால், ‘முள்ளும் மலரும்’ படத்தில் ஒரு குறையைக் கூட பார்க்கமுடியவில்லை. அந்தக் காட்சி அப்போது எப்படி அழ வைத்ததோ, அதேபோல, இப்போதும் என்னை அழவைத்தது. இந்தக் காட்சியைப் போல,‘தாரே ஜமீன் பர்’ படத்தில், அமீர்கானை ஓடி வந்து கட்டிக்கொள்ளும் குழந்தை. ‘இறுதிச்சுற்று’ படத்தில் ரித்திகாசிங், மாதவனை ஓடிவந்து கட்டிக்கொள்வார். ’முள்ளும் மலரும்’ உயிர்ப்பான காட்சி. எப்போது அதே உயிர்ப்புடனேயே இருக்கிறது. அதுதான் மகேந்திரன் சார் எனும் படைப்பாளியின் ஆளுமை.
‘உதிரிப்பூக்கள்’ படமும் அப்படித்தான். அந்தப் படத்தில் வருகிற விஜயன் போன்றதொரு வில்லனை, இதுவரை எந்தப் படத்திலும் எவரும் காட்டியதே இல்லை.
இப்போது தமிழ் சினிமாவில் கொண்டாடிக்கொண்டிருக்கிற ஒரு படத்தை திரும்பவும் பார்க்கிற போது, ஆயிரம் குறைகளுடன் அந்தப் படம் இருக்கிறது. ஆனால், ‘முள்ளும் மலரும்’, ‘உதிரிப்பூக்கள்’ படங்கள், அதனுடைய இடத்தில், அவை, அப்படியே இருக்கின்றன... ஒரு தங்கத்தைப் போல! ஒரு வைரத்தைப் போல!
என்னைப் பொருத்தவரை, ‘காளி’ கேரக்டரைத் தாண்டி இன்னொரு கேரக்டரை இதுவரை ரஜினி சார் செய்யவில்லை என்பதுதான் என் கருத்து. அப்படியொரு கதாபாத்திரத்தை கர்வத்துடன் படைத்திருக்கிற மகாகலைஞனாகத்தான் மகேந்திரன் சாரைப் பார்க்கிறேன். மற்ற எழுத்தாளர்களிடம் கதைகள், நாவல், குறுநாவல் என கேட்டு வாங்கி, அதைப் படமாக்கியிருக்கிறார்.
சினிமாவில் கிராமம் என்றாலே, பத்து ஆடுமாடுகள் போகட்டும். ஏர் கலப்பையுடன் ஒருவர் நடந்து போகட்டும். டிராக்டர் போகட்டும். இரண்டுபேர் குச்சி ஐஸ் சாப்பிட்டுக்கொண்டே போகட்டும் என கிராமத்தை பெரும் சப்தத்துடன் காட்டிக்கொண்டே இருந்தார்கள். ஆனால், தமிழகத்தின் எந்த கிராமத்துக்குப் போய், காலை 10 மணி, 11 மணிக்குப் பார்த்தால், அப்படியொரு அமைதியுடன் சைலண்டாக இருக்கும். ஒரு கிழவி நடந்து போய்க்கொண்டிருப்பாள். ஒரு நாய் தெருவில் புரண்டுகொண்டிருக்கும். ஏனென்றால், காலை 6 மணிக்கெல்லாம் வயல்காட்டிற்குச் சென்றுவிடுவார்கள். இந்த சைலண்ஸ் ஷாட், ‘உதிரிப்பூக்கள்’ படத்தில் இருக்கிறது. மகேந்திரன் சாருடைய ஈரம் அப்படியே அந்தக் காட்சியில் இன்னமும் இருக்கிறது.
தன்னுடைய கனவு மெய்ப்படுவதைக் கண்ட கலைஞன் மகேந்திரன் சார். எந்த இடத்திலும் சமரசம் பண்ணிக் கொள்ளாத, யாருக்கும் அடிபணியாத ஒரு எழுத்தாளருடைய வித்யாகர்வத்துடன் வாழ்ந்த மனிதர் மகேந்திரன் சார். அவர் நம் தமிழ் சினிமாவில் நாம் பார்க்க இருந்தார் என்பதே நமக்கெல்லாம் பெருமை.
இவ்வாறு இயக்குநர் வசந்தபாலன் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT