Last Updated : 22 Apr, 2019 01:04 PM

 

Published : 22 Apr 2019 01:04 PM
Last Updated : 22 Apr 2019 01:04 PM

மீடூ விவகாரம்: குழு அமைத்தது நடிகர் சங்கம்

மீடூ விவகாரம் தொடர்பாக 9 பேர் கொண்ட குழுவை அமைத்துள்ளது தென்னிந்திய நடிகர் சங்கம்.

பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை பொதுவெளியில் அம்பலப்படுத்தும் வகையில் ‘மீடூ' (நானும் தான்) என்ற ஹேஷ்டேக் பிரச்சார இயக்கம் ட்விட்டரில் நடந்து வருகிறது. இதில், அரசியல், திரையுலகம், ஊடகம் எனப் பல்துறை பிரபலங்கள் மீது பாலியல் புகார்கள் குவிந்து வருகின்றன.

தமிழ்த் திரையுலகில் கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி தெரிவித்த புகார், பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. மேலும், அமலா பால் உள்ளிட்ட சில நடிகைகளும் குற்றச்சாட்டு தெரிவித்தனர். இந்த இயக்கம் தொடர்பாக ஆதரவும் எதிர்ப்பும் ஒருசேர அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக குழு அமைக்க வேண்டும் என்ற வேண்டுகோளும் விடுக்கப்பட்டது.

தற்போது தென்னிந்திய நடிகர் சார்பில் 'மீடூ' ஒருங்கிணைப்புக் குழு ஒன்று அமைக்கப்படவுள்ளது. இதன் தலைவராக நடிகர் சங்கத் தலைவர் நாசர் செயல்படவுள்ளார். அக்குழுவில் நடிகர் சங்கத்தின் உறுப்பினர்களான விஷால், கார்த்தி, பூச்சி முருகன், குஷ்பு, ரோகிணி, சுஹாசினி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

மேலும், இக்குழுவில் சமூக ஆர்வலர் மற்றும் வக்கீல் ஆகியோரும் நியமிக்கப்பட உள்ளனர். மொத்தத்தில் 9 பேர் கொண்ட குழுவாக 'மீடூ' ஒருங்கிணைப்புக் குழு செயல்படவுள்ளது. திரையுலகில் பாலியல் தொல்லைக்கு உள்ளாகும் பெண்கள் புகார் அளித்தால், குழுவினர் நேரில் விசாரித்து நடவடிக்கை எடுப்பார்கள்.

இந்தக் குழு தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து விரைவில் வெளியாகவுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x