Published : 26 Apr 2019 12:14 PM
Last Updated : 26 Apr 2019 12:14 PM
ஒரு நல்ல முடிவு எடுப்போம்; அமைதி காப்போம் என்று ரசிகர்களுக்கு லாரன்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
'காஞ்சனா 3' படம் வெளிவருவதற்கு நாம் தமிழர் கட்சியினர் செயலை மறைமுகமாக விமர்சித்து நடிகர் மற்றும் இயக்குநர் ராகவா லாரன்ஸ் கடுமையாக விமர்சித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதற்கு அவ்வாறு நடந்திருந்தால், வருத்தம் தெரிவிப்பதாக சீமான் பதிலளித்தார்.
இச்சம்பவம் தொடர்பாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானின் நெருங்கிய நண்பரான தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். இதில் லாரன்ஸை கடுமையாக விமர்சித்திருந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக திருநங்கைகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அவர் மீது போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் அளிக்க முடிவு செய்திருந்தனர். இது தொடர்பாக தற்போது லாரன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:
'' 'காஞ்சனா 3' படத்தை மாபெரும் வெற்றிப் படமாக்கிய ரசிகர்களுக்கு மிக்க நன்றி. என் மீது அன்புள்ளவர்களுக்கு ஒரு வேண்டுகோள். என்னைப் பற்றியும் எனது சேவைகளைப் பற்றியும் அவதூறு பேசுவர்களைப் பற்றி கவலைப்படாதீர்கள்.
என் மீது அக்கறை உள்ள ஒருசில மாற்றுத் திறனாளிகளும், திருநங்கைகளும் போலீஸ் கமிஷ்னர் அலுவலகத்தில் சம்பந்தப்பட்டவர் மீது புகார் அளிப்பதாக கேள்விப்பட்டேன். அப்படி எதுவும் செய்யாதீர்கள்..பொறுமையைக் கடைபிடியுங்கள்.
நாம் நமது வழியில் நல்லதை மட்டும் நினைப்போம்..நல்லதையே செய்வோம். அவர்கள் அவர்கள் வழியில் போகட்டும். எனக்கு ஒரு சின்ன பிரச்சினை என்றால் உடனே ஓடி வருகிற உங்கள் ஒவ்வொருவருக்கும் என் குடும்பத்தார் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
நான் மும்பையில் 'காஞ்சனா' இந்திப் படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறேன். படப்பிடிப்பு முடிந்து வந்தவுடன் ஒரு நல்ல முடிவு எடுப்போம். அதுவரை அமைதி காப்போம். கடவுள் நமக்கான நல்லதைச் செய்வார்.
நமக்குக் கெடுதல் நினைப்பவர்களுக்கும் நாம் நல்லது நடக்க ஆண்டவனை பிரார்த்திப்போம். நம்மைப் பற்றி புரிந்துகொள்ள ஆண்டவன் அருள் அவர்களுக்குக் கிடைக்கட்டும்''.
இவ்வாறு ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT