Published : 04 Apr 2019 05:12 PM
Last Updated : 04 Apr 2019 05:12 PM
காரைக்காலில் உள்ள ஹாக்கி மைதானத்தில் ஃபேக்டரி கட்ட நினைக்கிறது பன்னாட்டுக் கம்பெனி ஒன்று. அதற்கு மத்திய, மாநில அரசியல்வாதிகளும் ஆதரவாக இருக்கின்றனர். காலம் காலமாக அங்கு விளையாடிக் கொண்டிருப்பவர்களிடம் இருந்து அந்த மைதானத்தை அபகரிக்க முயல்கின்றனர். எதிரிகளிடம் இருந்து அந்த மைதானத்தை எப்படி மீட்கிறார் ஹீரோ என்பதுதான் படத்தின் கதை.
படத்தில் ரசிக்கும்படி இருப்பது, ஹாக்கிப் போட்டி நடைபெறும் 20 நிமிட க்ளைமாக்ஸ் காட்சிதான். அதற்கு முன்னதாக, கதை என்ற பெயரில் எதையோ முயற்சி செய்துள்ளனர். படத்தின் முதல் பாதி இழுவையாகவும், ஒவ்வொரு காட்சியும் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமலும் இருக்கிறது.
இரண்டாம் பாதியில்தான் கதையும் காட்சிகளும் சீராகச் செல்லத் தொடங்குகின்றன. அதன்பின் திரைக்கதை சூடு பிடிக்கிறது. முதல் பாதிக்கும் சேர்த்து விறுவிறுப்பைத் தந்திருக்கிறது க்ளைமாக்ஸ் ஹாக்கிப் போட்டி.
முதல் பாதியில் ஹீரோ ஆதி உள்பட யாருமே ஒழுங்காக நடிக்கவில்லை. டயலாக் பேப்பரை மேலோட்டமாகப் பார்த்துவிட்டு, வசனங்களை அப்படியே ஒப்பிப்பது போல் ஒவ்வொருவரும் பேசுகின்றனர். எல்லோரும் ஏதேதோ கத்திக் கொண்டிருக்க, ஹரிஷ் உத்தமன் மட்டும் அமைதியாகப் பேசுவதால், அவர் மட்டும் பரவாயில்லை என்று தோன்றுகிறது.
ஆனால், இரண்டாம் பாதியில் அனைவரும் பொறுப்பை உணர்ந்து நடித்திருக்கின்றனர். ஹாக்கிப் போட்டியின் வாழ்வா? சாவா? போராட்டம், படம் பார்ப்பவர்களையும் தொற்றிக் கொள்கிறது. அதுதான் இந்தப் படத்துக்குப் பலமாகவும் அமைந்துள்ளது.
விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்களுக்கான வழக்கமான ஃபார்முலா, அதில் உள்ள அரசியல், போட்டியின் முதல் பாதியில் எதிர் அணி நிறைய புள்ளிகள் எடுத்துவிட, ஒருவர் தன்னம்பிக்கை வசனம் பேசியபின் இரண்டாம் பாதியில் அதிகப் புள்ளிகள் எடுத்து ஹீரோ அணி வெற்றி பெறுவது... அதிலிருந்து கொஞ்சம்கூட இந்தப் படமும் விலகவில்லை. ஆனால், இடையிடையே அரசியல் வசனங்கள் பேசி, கொஞ்சம் தனித்துத் தெரிகிறது. அதுவும் க்ளைமாக்ஸில் கரு.பழனியப்பன் கேட்கும் அந்தக் கேள்வி, தேர்தல் நேரத்தில் ஒவ்வொரு வாக்காளனையும் நோக்கி கேட்கப்படுகிறது.
ஹீரோவாக ‘ஹிப் ஹாப் தமிழா’ ஆதிக்கு இது இரண்டாவது படம். முடிந்த அளவுக்கு மாஸ் காண்பிக்க முயற்சி செய்திருக்கிறார். விஜய், சிவகார்த்திகேயன் போல குழந்தைகளைக் கவர, ஓப்பனிங் பாடலில் இடையிடையே குழந்தைகளுடன் ஆடியிருக்கிறார். மேலும், இன்னொரு பாடலிலும் குழந்தைகள் தலைகாட்டுகின்றனர்.
ஹீரோயின் அனகாவுக்குப் பெரிதாக வேலையில்லை. எந்த நேரமும் ஹாக்கி மட்டையும், குட்டைப் பாவாடையுமாகச் சுற்றுகிறார். விளையாட்டுத்துறை அமைச்சராக இயக்குநர் கரு.பழனியப்பன் வில்லத்தனம் செய்ய முயன்றிருக்கிறார். ஆனால், அந்த இலக்கிய முகபாவனையில் வில்லத்தனம் கைகூடவில்லை. அவருடைய உதவியாளராக நடித்துள்ள சுட்டி அரவிந்த், அந்தக் கதாபாத்திரத்துக்கான பங்கை நிறைவாகச் செய்துள்ளார்.
ஹாக்கிப் பயிற்சியாளர்களாக நடித்துள்ள ஹரிஷ் உத்தமன், இளங்கோ குமரவேல் இரண்டு பேரில், ஹரிஷ் உத்தமன் கவனிக்க வைக்கிறார். மற்றும் பல யூ ட்யூப் நட்சத்திரங்கள் நிறைய பேர் நடித்துள்ளனர். ‘எரும சாணி’ விஜய்க்கு மட்டும் காட்சிகள் கொஞ்சம் கூடுதல். விளையாட்டுத்துறை அதிகாரியாக நடித்திருக்கும் ‘புட் சட்னி’ ராஜ்மோகன், ஓவர் ஆக்டிங்.
க்ளைமாக்ஸ் ஹாக்கிப் போட்டியில் ரன்னிங் கமெண்ட்ரி சொல்லும் ‘ரேடியா மிர்ச்சி’ விஜய்யும், ‘ரேடியோ சிட்டி’ முன்னாவும் ரசிக்க வைக்கின்றனர். ஒரு ஃபிரேமிலாவது அவர்கள் முகத்தைக் காட்டியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
முதல் பாதியின் பின்னணி இசையில் கோட்டைவிட்ட ஆதி, பின்பாதியில் சுதாரித்துக் கொள்கிறார். ஹாக்கிப் போட்டியின் விறுவிறுப்பை நம்முள் கடத்த, ஆதியின் பின்னணி இசையும் முக்கியக் காரணமாக இருக்கிறது. பெரும்பாலான பாடல்களில் என்ன பாடுகிறார்கள் என்றே கேட்கவில்லை. அந்தளவுக்கு பாடகர்களின் குரல்களைவிட, இசையின் சத்தம் அதிகமாக இருக்கிறது. ‘வேங்க மவன் ஒத்தையில’, ‘சிங்கிள் பசங்க’ இரண்டு பாடல்களும் ஓகே. முதல் பாதியில் சும்மா சும்மா பாடல்களை வைத்துப் போரடிக்கின்றனர்.
ஆதியின் அம்மாவாக கெளசல்யா, மாமாவாக பாண்டியராஜன் ஆகியோருக்குக் கூட முக்கியத்துவம் இல்லை. ஆதியின் இன்னொரு மாமாவாக பிஜிலி ரமேஷ். எமோஷனலான அந்த கேரக்டரில் பிஜிலியைப் பார்த்ததும் சிரிப்பு வந்துவிடுவதால், காட்சியோடு நெருங்க முடியவில்லை.
ஆனால், ‘நட்புதான் துணை’ எனப் படம் முழுக்க அடிக்கடி இயக்குநர் பார்த்திபன் தேசிங்கு நியாகப்படுத்திக் கொண்டே இருப்பதால், தியேட்டரில் விசில் சத்தமும் கைதட்டலும் கேட்டுக் கொண்டேயிருக்கிறது.
தேர்தலையும், கோடை விடுமுறையையும் டார்கெட் செய்து வெளியாகியுள்ள இந்தப் படத்துக்குக் ‘கல்லூரி மாணவர்களே துணை’.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT