Published : 02 Apr 2019 09:22 AM
Last Updated : 02 Apr 2019 09:22 AM
மக்களவைத் தேர்தல் கள நிலவரம் சூடு பறக்கும் சூழலில் வருகிற 10-ம் தேதி நடிகர் ரஜினிகாந்த் தனது புதிய படத்தின் படப்பிடிப்பாக மும்பை செல்கிறார். இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க உள்ள இப்படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதப் பகுதி மும்பையில்தான் நடக்க உள்ளது.
முழு திரைக்கதை வடிவத்தையும் தயார் செய்த இயக்குநர் ஏ.ஆர்.முருதாஸ் சமீபத்தில் பழநி முருகன் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்தார். திரும்பியதும் அதன் முழு திரைக்கதை வடிவத்தையும் ரஜினியின் பார்வைக்கும் அனுப்பியுள்ளார். அதை தற்போது படித்து வரும் ரஜினி, வரும் வாரம் முதல் படப்பிடிப்பில் கலந்துகொள்ள திட்டமிட்டிருக்கிறார்.
ரஜினியின் மறுமுகம்
நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம், வெற்றி கணிப்பு, வியூகம் என பரபரப்பாகியுள்ள நிலையில், ‘தண்ணீர் பிரச்சினையை தீர்த்து வைப்பவர் என்று நீங்கள் நம்புவர்களுக்கு உங்கள் வாக்கை அளியுங்கள்!’ என்ற ஒற்றை வாசகத்தோடு சமீப நாட்களாக தான் பெரிதும் நேசிக்கும் ஆன்மிகம், புதிய படத்தின் படப்பிடிப்பு என தனது திசையில் பயணிக்க உள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.
அதிலும் அண்மைக் காலத்தில் ஒரு யூ-டியூப் சேனல் வீடியோ பதிவில் ‘ஒரு யோகியின் சுயசரிதம்’ ஒலிநூல் குறித்த அவரது ஆடியோ பதிவு அதிக அளவில் பார்வையாளர்களால் ஈர்க்கப்பட்டுள்ளது.
அந்தப் வீடியோ பதிவோடு மட்டுமல்லாமல் தனிப்பட்ட முறையில் எந்த ஒரு நூலுக்கோ, நபருக்கோ பெரிதாக விளம்பரம் செய்ய முன் வராத ரஜினிகாந்த், சமீபத்தில் சென்னையில் நடந்த பரஹம்ஸ யோகானந்தர் எழுதிய ‘ஒரு யோகியின் சுயசரிதம்’ ஒலிநூல் வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டார்.
வாழ்க்கையை மாற்றிய அனுபவம்
பரஹம்ஸ யோகானந்தரின் மூன்றாவது குருவான மகா அவதார் பாபாஜி குறித்த தாக்கம் அதிகம் ஏற்பட்டதால்தான் ‘பாபா’ என்ற படத்தையே ரஜினிகாந்த் எடுத்தார் என்பது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றே. பாபாஜி பற்றிய நுணுக்கமான பல விஷயங்களை இந்நூல் வழியே ரஜினி பெற்றிருக்கிறார். அதிலும், ‘ப்ராணாயாமத்
தின் ஒரு பகுதியான கிரியா யோகாவை பாமரருக்கும் பரப்ப வேண்டும்’ என்ற பாபாஜியின் கொள்கையை பின்பற்றிய மனிதர்களில் ஒருவராக தன்னையும் ரஜினி நம்புகிறார். அந்த நம்பிக்கையை ஏற்படுத்திய புத்தகமாக இந்தப் புத்தகம் இருப்பதால் அதன் ஒலிநூல் வெளியிட்டு விழாவில் கலந்துகொண்டிருக்கிறார், அதைப் பற்றி தொடர்ச்சியாக பேசி வருகிறார்!’’ என்றனர் அவருக்கு நெருக்க மானவர்கள்.
‘‘என் வாழ்க்கையில் எதைத் தேடிக்கொண்டிருந்தேனோ அதை கிரியா யோகா வழியே அடைந்தேன். இதை அனுபவிப்பதே ஒரு பாக்கியம். எவ்வளவு பணிகள் சூழ்ந்தாலும் தினசரி காலை 8 மணி முதல் 9 மணி வரையிலும், மாலை வேளையில் அதே மாதிரி 8 மணி முதல் 9 மணி வரையிலும் யோகா செய்வதை பல ஆண்டுகளாக தொடர்கிறேன். இதைத் தொடரும்போது நமக்குள் ஒரு பெரிய அற்புதம் நடக்கும். அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. அந்த அற்புதத்தை நான் உணர்ந்ததால்தான் என் வாழ்க்கை மாறியது!’ என்று ரஜினி இந்த புத்தக வெளியீடு தொடர்பான பதிவில் கூறியுள்ளார்.
செப்டம்பரில் இமயமலை
ஒரு படத்தின் படப்பிடிப்புக்கு முந்தைய காலகட்டத்திலோ அல்லது அது முடியும் நேரத்திலோ இமயமலை பயணத்தை மேற்கொள்வது ரஜினிகாந்த்தின் வழக்கம். இந்நிலையில் தற்போது ஏ.ஆர்.முருதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு கோடை பருவம் முழுவதையும் கால்ஷீட் கொடுத்துவிட்டு வருகிற செப்டம்பர் மாதம் இமயமலைக்குச் செல்ல திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT