Last Updated : 20 Apr, 2019 05:02 PM

 

Published : 20 Apr 2019 05:02 PM
Last Updated : 20 Apr 2019 05:02 PM

சாதி வன்முறை பற்றி வைரலான ஃபேஸ்புக் பதிவு: இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம்

சாதி வன்முறை பற்றி தன் பெயரில் வைரலான ஃபேஸ்புக் பதிவு தொடர்பாக இயக்குநர் வெற்றிமாறன் விளக்கம் அளித்துள்ளார்.

பொன்பரப்பி கிராமத்தில் ஏப்ரல் 18-ம் தேதி காலை வாக்குப் பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. அப்போது, வாக்குப் பதிவு மையத்தின் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனின் சின்னமான பானையைத் தூக்கிவந்த ஒரு பிரிவினர் ரோட்டில் போட்டு உடைத்தனர். இதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டதில் ஒருவர் காயமடைந்தார்.

இதையெடுத்து தேர்தல் அன்று அந்தக் கிராமத்தில் பெரியளவில் கலவரம் ஏற்பட்டது. வீடுகளும் அடித்து நொறுக்கப்பட்டன. சிலர் காயமடைந்தனர். இந்த விவகாரத்தில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

பொன்பரப்பி விவகாரம் விஸ்வரூபம் எடுத்து வரும் இச்சமயத்தில், இயக்குநர் வெற்றிமாறனின் ஃபேஸ்புக் பதிவு என்று சமூகவலைத்தளத்தில் சில வார்த்தைகள் வைரலாகி வருகிறது. அதில் சாதி வேண்டாம் என்ற ரீதியில் பதிவு இருந்தாலும், வார்த்தைகள் அனைத்துமே சாதி ரீதியாகவும் ஒருமையிலும் இருந்தது. வைரலான அந்த ஃபேஸ்புக் பதிவு தொடர்பாக இயக்குநர் வெற்றிமாறனிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:

எனக்கு சாதிகள் அற்ற சமத்துவமான, சாதி வேறுபாடு, மத வேறுபாடுகள் அற்ற தமிழ் இனம் தான் தேவை. சாதி பாகுபடுகள் எள்ளவும் இல்லாத சூழல் தான் எனக்கு தேவை. ஆனால், அப்பதிவில் பயன்படுத்தி இருக்கிற வார்த்தைகளுடைய தன்மையில் நான் என்னை வெளிப்படுத்திக் கொள்ள மாட்டேன். ஃபேஸ்புக்கில் நான் எதுவும் பதிவிடவில்லை. நான் யாருக்கும் பேட்டியும் கொடுக்கவில்லை. அப்பதிவுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. அப்பதிவின் கருத்துகளோடு நான் ஒத்துப் போனாலும், அதை தெரிவித்திருக்கிற விதத்தில் நான் உடன்படவில்லை.

இவ்வாறு இயக்குநர் வெற்றிமாறன் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x