Last Updated : 24 Apr, 2019 06:08 PM

 

Published : 24 Apr 2019 06:08 PM
Last Updated : 24 Apr 2019 06:08 PM

தயவுசெய்து என்னை சாதிக்குள் கொண்டுபோய் விடாதீர்கள்: இயக்குநர் முத்தையா வேண்டுகோள்

தயவுசெய்து என்னை சாதிக்குள் கொண்டுபோய் விடாதீர்கள் என்று இயக்குநர் முத்தையா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

'கொடிவீரன்' படத்தைத் தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'தேவராட்டம்'. கவுதம் கார்த்திக், மஞ்சிமா மோகன், சூரி, போஸ் வெங்கட், வினோதினி, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ளது.

மே 1-ம் தேதி வெளியாகவுள்ள இப்படம் தொடர்பாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. இச்சந்திப்பில் இயக்குநர் முத்தையா பேசியதாவது:

''நான் படிப்பில் மிடில் கிளாஸ் தான். இப்படத்தில் வேலை செய்த எல்லோருமே படித்தவர்கள். ஹீரோ, கேமரா மேன், இசையமைப்பாளர் இவர்களோடு வேலை செய்வது மனைவியோடு  லைஃப் நடத்துவது போல. சரியாக இல்லாவிட்டால் சிக்கல் தான்.

ஞானவேல்ராஜா சாரிடம் 'கொம்பன்' படம் நேரத்திலே கவுதமை வைத்து படம் பண்ணலாம் என்றேன். அவர் கார்த்தியைத் தாரேன் என்றார். ஆனால் இன்று ஞானவேல்ராஜா சார் படத்தில் கவுதம் கார்த்திக் இருக்கிறார். இதுதான் அவரது வளர்ச்சி. 'கொம்பன்' படம் எனக்கு நல்ல அடையாளம்.

'தேவராட்டம்' சாதிப் படம் கிடையாது. எனக்கு அது தெரியவும் தெரியாது. குடும்ப உறவுகளைப் பற்றிய படம் தான் இது. ஏன் உன் படத்தில் அருவாள் இருக்கிறது என்கிறார்கள். கமர்ஷியல் படம் என்றால் அதை வைத்து தான் ஆகவேண்டிய இருக்கிறது. வெளியில் வந்தால் தான் நட்பு, வீட்டுக்குள் வந்தால் உறவு தான். உறவுகள் சரியாக இருந்தால் தவறுகள் நடக்காது.

பொள்ளாச்சி சம்பவத்தில் அப்படி ஈடுபட்டவர்களை பலரும் வெட்டவேண்டும், கொல்ல வேண்டும் என்றார்கள். அதை நிஜத்தில் செய்ய முடியவில்லை. அதனால் தான் அதைப் படத்தில் வைக்கிறோம். கோபத்தின் வெளிப்பாடு தான் ஹீரோவின் கேரக்டர்.

பணம் என்பது சினிமாவுக்கு ரொம்ப முக்கியம். அதனால் தான் கமர்ஷியல் விஷயங்களை படத்தில் அதிகமாக வைக்கிறேன். சிட்டியில் படம் எடுத்தாலும் உறவுகளைப் பற்றித்தான் படம் எடுப்பேன். தயவுசெய்து என்னை சாதிக்குள் கொண்டுபோய் விடாதீர்கள். இந்தப்படத்தை இவ்வளவு சீக்கிரமாக எடுக்க முடிந்ததிற்கு படத்தில் படத்தில் உழைத்த அனைவரும் காரணம். இந்தப் படத்தை முழுவதும் பார்த்துவிட்டு ஞானவேல்ராஜா சந்தோஷப்பட்டார். அதுதான் எனக்கு முதல் சந்தோஷம்''.

இவ்வாறு இயக்குநர் முத்தையா பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x