Published : 10 Apr 2019 06:12 PM
Last Updated : 10 Apr 2019 06:12 PM
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்திற்காக பிரம்மாண்டமான ஃபுட்பால் அரங்கம் அமைக்கப்பட்டதற்கான காரணம் என்னவென்று தெரியவந்துள்ளது.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார் அட்லீ. இதன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், கதிர், யோகி பாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வருகிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் பிரத்யேக காட்சிகளின் படப்பிடிப்புக்காக பிரம்மாண்டமான ஃபுட்பால் அரங்கம் ஒன்றை அமைத்து வருகிறது படக்குழு. இதற்காக மட்டும் சுமார் 6 கோடி ரூபாய் வரை செலவு செய்துள்ளது. இதில் தான் படத்தில் வரும் ஃபுட்பால் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தையுமே படமாக்க திட்டமிட்டுள்ளது படக்குழு.
பல்வேறு ஃபுட்பால் மைதானம் இருக்கும் போது, ஏன் இத்தனை கோடியில் அரங்கம் என்று விசாரித்த போது கிடைத்த தகவல்கள் சுவாரஸ்யமானது. என்னவென்றால், இந்த அரங்கம் அமைக்கும் முன்பாக பல்வேறு ஃபுட்பால் மைதானங்களில் படப்பிடிப்பு நடத்துவதற்காக அணுகியுள்ளது.
மைதானத்துக்குள் கேமரா உபகரணங்களை வைத்து படப்பிடிப்பு நடத்தக் கூடாது. பார்வையாளர்கள் இருக்கும் இடத்திலிருந்து காட்சிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல நிபந்தனைகளைக் கூறியுள்ளது. இதற்காக ஒரு பெருந்தொகையையும் கேட்டுள்ளது. வெளிநாட்டு மைதானங்களில் காட்சிப்படுத்தலாம் என்றால், ஒட்டுமொத்த படக்குழுவையும் அழைத்துச் செல்ல வேண்டும். 50 நாட்கள் படப்பிடிப்பு, தங்கும் செலவும் என சேர்த்து ஒரு பெரும் தொகை போய்விடும்.
இந்தக் காரணங்கள் எல்லாம் வைத்தே, ஃபுட்பால் மைதானத்தை அரங்கமாக சென்னையில் போட்டுள்ளார்கள். இதற்கு 6 கோடி ரூபாய் செலவு செய்துள்ளார்கள். படத்துக்கு தேவையான காட்சிகள் அனைத்தையும் எங்கு வேண்டுமானாலும் கேமரா வைத்து காட்சிப்படுத்திக் கொள்ளலாம் என்பதே இதற்குக் காரணம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT