Last Updated : 05 Apr, 2019 03:39 PM

 

Published : 05 Apr 2019 03:39 PM
Last Updated : 05 Apr 2019 03:39 PM

எனை நோக்கி பாயும் தோட்டா பாடல்கள் இணையத்திலிருந்து நீக்கப்பட்டதன் பின்னணி!

'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் பாடல்கள் இணையத்திலிருந்து நீக்கப்பட்டதற்கான காரணம் என்னவென்று தெரியவந்துள்ளது.

கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், சசிகுமார், மேகா ஆகாஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'எனை நோக்கி பாயும் தோட்டா'. நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வரும் இப்படத்துக்கு தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.

இப்படத்தின் 'மறுவார்த்தை பேசாதே', 'விசிறி' மற்றும் 'நான் பிழைப்பேனோ' பாடல்கள் இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றவை. மேலும், படத்தின் டீஸருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது. இவை அனைத்துமே கவுதம் மேனனின் 'ஒன்றாக' யூ டியூப் பக்கத்தில் இடம்பெற்றிருந்தன.

இந்நிலையில் திடீரென்று 'எனை நோக்கி பாயும் தோட்டா' சம்பந்தப்பட்ட அனைத்து  பாடல்கள் மற்றும் டீஸர் ஆகியவை 'ஒன்றாக' யூ டியூப் பக்கத்திலிருந்து நீக்கப்பட்டன. இதனால், இப்படம் கைவிடப்பட்டதாகப் பலரும் கருத்து தெரிவித்தனர். இதனால், இணையத்தில் தனுஷ் ரசிகர்கள் மத்தியில் இச்செய்தி பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

இது தொடர்பாக படக்குழுவில் பணிபுரியும் ஒருவரிடம் பேசிய போது, "படம் வெளியீட்டில் உள்ள சிக்கல்களைத் தீர்த்து வெளியீட்டுக்குத் தயாராகி வருகிறோம். இதற்காக பைனான்சியர்களிடம் தொடர்ச்சியாகப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

இச்சமயத்தில் தான் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படத்தின் இசை உரிமையை, சோனி நிறுவனம் நல்ல விலைக்கு வாங்கிக் கொள்வதாக வந்தார்கள். இதற்கு முன்பாக, இப்படத்தின் இசை உரிமை அனைத்துமே கவுதம் மேனனிடம் தான் இருந்தது. ஆகையால் தான் அவருடைய நிறுவனத்தின் யூ டியூப் பக்கத்திலே இடம்பெற்றிருந்தது.

தற்போது இசை உரிமையை சோனி நிறுவனத்துக்கு மாற்றிவிட்டால், அந்த நிறுவனத்தின் யூ டியூப் பக்கத்தில் தான் பாடல்கள், டீஸர் இடம்பெற வேண்டும். இப்பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தில் இருப்பதால் மட்டுமே, தற்போதைக்கு தனது 'ஒன்றாக' யூ டியூப் பக்கத்திலிருந்து ப்ரைவேட் செய்து வைத்திருக்கிறோம். அதாவது பொதுமக்களுக்குத் தெரியாது. அதனை நீக்கவில்லை.

இந்தப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தால், சோனி நிறுவனத்தின் யூ டியூப் பக்கத்துக்கு 'எனை நோக்கி பாயும் தோட்டா' பாடல்கள் அதே வியூஸ் எண்ணிக்கையுடன் மாற்றப்பட்டுவிடும். பாடல்கள் நீக்கத்தால் 'எனை நோக்கி பாயும் தோட்டா' படம் கைவிடப்பட்டதாகக் கூறுவது எல்லாம் சுத்தப் பொய். ஒட்டுமொத்த படத்தின் ஷூட்டிங் முடிந்து, படத்தை தணிக்கையும் செய்துவிட்டோம். மே மாதம் கண்டிப்பாக திரைக்கு வரும். அதில் எவ்விதம் மாற்றமும் இல்லை" என்று தெரிவித்தார்.

வெற்றிமாறன் இயக்கி வரும் 'அசுரன்' மற்றும் துரை.செந்தில்குமார் இயக்கி வரும் படம் ஆகியவற்றில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். ஆகையால், தனுஷ் ரசிகர்களுக்கு 'எனை நோக்கி பாயும் தோட்டா' வெளியீடு தொடர்பாக விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என்று உறுதியாகச் சொல்லலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x