Published : 17 Apr 2019 10:44 AM
Last Updated : 17 Apr 2019 10:44 AM
‘’சின்னச்சின்ன வசனங்கள் எழுதுவதுதான் இயக்குநர் மகேந்திரன் சாரோட ஸ்டைல்’’ என்று நடிகர் ராஜேஷ் பெருமிதத்துடன் குறிப்பிட்டுப் பேசினார்.
இயக்குநர் மகேந்திரனுக்கு நினைவாஞ்சலிக் கூட்டம், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு நடிகர் ராஜேஷ் பேசியதாவது:
எம்ஜிஆரால் காரைக்குடியிலிருந்து சென்னைக்கு, சினிமா உலகுக்கு அழைத்து வரப்பட்டவர் மகேந்திரன் சார். பிறகு அவர், சோவின் துக்ளக் பத்திரிகையில் உதவி ஆசிரியராக வேலை பார்த்தார். அவருடன் நான் சென்னை முழுக்கச் சுற்றியிருக்கிறேன்.
பேருந்தில் ஏறிச் செல்லலாம் என்றால் பணமும் குறைவாக இருக்கும். ‘வாய்யா, நடந்துபோலாம்’ என்று சொல்லி, என்னை நடந்தே சென்னையின் பல பகுதிகளுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். இயக்குநர் ஸ்ரீதரை தன் ரோல்மாடலாகவேக் கொண்டிருந்தார். அவரின் படம் எடுக்கும் விதமும் ஸ்ரீதர், கேமிராவுக்குக் கொடுக்கும் முக்கியத்துவமும் மகேந்திரன் சாரை ரொம்பவே ஈர்த்தன.
அந்தசமயத்தில்தான் நடிகர் செந்தாமரை, மகேந்திரனிடம், ‘ஒரு கதை எழுதிக்கொடு. டிராமா போடலாம்’ என்றார். மகேந்திரன் சாரும் ‘இரண்டில் ஒன்று’ எனும் நாடகத்தை எழுதிக்கொடுத்தார். மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
அந்த நாடகத்தைப் பார்த்த நடிகர்திலகம் சிவாஜி, ‘நான் நடிக்கிறேன்’ என்று நாடகத்தில் நடித்தார். அதுமட்டுமா? இதை சினிமாவாக எடுக்கலாம் என்று சொல்லி, தன் சொந்தப் பட நிறுவனத்திலேயே ‘தங்கப்பதக்கம்’ என்று தயாரித்து நடித்தார்.
இதேபோல் ஏராளமான படங்களுக்கு பக்கம்பக்கமாக வசனம் எழுதிய மகேந்திரன் சார், தான் படத்தை இயக்கிய போது, அப்படியே வசனங்களைக் குறைத்துக் கொண்டார். சின்னச்சின்ன வசனங்களில் கதை குறித்தும் கேரக்டர் குறித்தும் அவர்களின் உணர்வுகள் குறித்தும் தெளிவாகச் சொன்னார். அப்போது, சின்னச்சின்ன வசனங்கள் என்பதே மகேந்திரன் ஸ்டைல் என்றானது.
வீண் அரட்டை பிடிக்காது. வெட்டியாக பொழுதைக் கழிக்கமாட்டார். மிகச்சிறந்த படைப்பாளி. நிறைய படித்துக்கொண்டே இருப்பார். எம்ஜிஆர், சிவாஜி, கமல், ரஜினி என்று தொடர்பு இருந்தாலும் பந்தா எதுவும் இல்லாமலேயே இருந்தார். காசு பணம், பதவிக்கெல்லாம் அவர் ஒருபோதும் ஆசைப்பட்டதே இல்லை.
மகேந்திரன் சார்... தனித்துவமானவர்.
இவ்வாறு நடிகர் ராஜேஷ் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT