Last Updated : 19 Apr, 2019 02:31 PM

 

Published : 19 Apr 2019 02:31 PM
Last Updated : 19 Apr 2019 02:31 PM

ரசிகர்களை ஏமாற்றமாட்டேன்; கட்சி ஆரம்பிப்பது எப்போது?- ரஜினி பதில்

ரசிகர்களை ஏமாற்றமாட்டேன் என்றும் கட்சி ஆரம்பிப்பது எப்போது? என்பது குறித்தும் ரஜினி பதிலளித்துள்ளார்.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் 'தர்பார்'. இதன் படப்பிடிப்பிலிருந்து மக்களவைத் தேர்தலுக்கு வாக்களிக்க சென்னை வந்தார் ரஜினி. தனது வாக்கினை நேற்று (ஏப்ரல் 18) பதிவு செய்துவிட்டு, இன்று (ஏப்ரல் 19) மீண்டும் படப்பிடிப்புக்காக மும்பை சென்றார்.

அப்போது பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு ரஜினி அளித்த பதில் அளித்தார்.

தமிழகத்தில் 70% தான் வாக்குகள் பதிவாகியுள்ளன.மிகவும் குறைவு என்கிறார்களே?

70% வாக்குப்பதிவு என்பது நல்ல வாக்குப்பதிவு தான். சென்னையில் மட்டும் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் நிறைய பேர் வெளியூருக்குச் சென்றுவிட்டார்கள் என நினைக்கிறேன். மற்றபடி 70% வாக்குப்பதிவு என்பது நல்ல விஷயம் தான்.

கடும் வெயிலில் மக்கள் மிகவும் அவதிப்பட்டார்கள். இதனால், வாக்குப்பதிவு மையங்கள் அதிகரிக்க வேண்டும் என்கிறார்களே?

கண்டிப்பாக வாக்குப்பதிவு மையங்கள் அதிகரித்தால் நன்றாக இருக்கும்.

நேற்று ட்விட்டரில் #அடுத்த_ஓட்டு_ரஜினிக்கே என்பது ட்ரெண்டானதே?

அவர்களுடைய ஆர்வம் புரிகிறது. அவர்களை ஏமாற்றமாட்டேன்.

18 தொகுதி இடைத்தேர்தல் நடந்துள்ளது. மே 23-ம் தேதி முடிவுகள் வருகின்றன. ஒரு வேளை தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வந்தால் உடனடியாக கட்சி அறிவிப்பீர்களா?

பார்க்கலாம். மே 23-க்குப் பிறகு அதைப் பற்றி முடிவு செய்யலாம்.

மீண்டும் மோடி பிரதமராக வாய்ப்பு இருக்கிறதா?

மே 23-ம் தேதி அது தெரிந்துவிடும்.

தேர்தலில் சமூகம் சார்ந்து சில வன்முறைகள் எல்லாம் நடந்துள்ளதே?

முன்பு நடந்ததுக்கு எல்லாம் இப்போது நடந்தது ரொம்பக் குறைவு தான். அதில் சந்தேகமுமில்லை.

தேர்தலில் பணம் மிகவும் விளையாடியுள்ளது. இது தேர்தல் ஆணையத்தின் தோல்வி என்ற கருத்து இருக்கிறதே. உங்கள் கருத்து என்ன?

அதை தேர்தல் ஆணையம் தான் பார்க்க வேண்டும்.

உங்களுடைய அரசியல் வருகையை எப்போது எதிர்பார்க்கலாம்?

எப்போது சட்டப்பேரவை தேர்தல் வரப்போகிறதோ, அப்போது எதிர்பார்க்கலாம். இந்தத் தேர்தல் முடிவுகள் எல்லாம் முதலில் வரட்டும். அப்புறம் சொல்கிறேன்.

ஒருவேளை ஆட்சி மாற்றத்தில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வந்தால் போட்டியிடுவீர்களா?

எப்போது வந்தாலும் தயார் தான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x