Published : 12 Apr 2019 04:48 PM
Last Updated : 12 Apr 2019 04:48 PM
வீடு தொடர்பான சர்ச்சை தொடர்பாக தனது அம்மாவுக்கு நடிகை சங்கீதா வேதனையுடன் கூடிய கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
'பிதாமகன்', 'உயிர்', 'காளை', 'தனம்' உள்ளிட்ட பல படங்களில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தவர் சங்கீதா. பாடகர் க்ரிஷைக் காதலித்து திருமணம் செய்து கொண்டவர். இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறார்.
தற்போது சங்கீதாவின் தாய் பானுமதி, "வயதான என்னை வெளியேற்றிவிட்டு, தான் வசித்து வரும் வீட்டை அபகரிக்க முயல்கிறார்" என்று சங்கீதா மீது தமிழ்நாடு மகளிர் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். இப்புகார் தொடர்பான விளக்கம் அளிக்க சங்கீதாவும், க்ரிஷும் நேரில் மகளிர் ஆணையத்தில் ஆஜரானார்கள்.
இந்த சர்ச்சைத் தொடர்பாக சங்கீதா தனது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது:
''அன்புள்ள அம்மா.. என்னை இந்த உலகுக்குக் கொண்டு வந்ததற்காக நன்றி. எனது பள்ளிப் படிப்பை நிறுத்துவிட்டு 13 வயதிலேயே வேலையில் சேர்த்தாயே.. அதற்கும் நன்றி. வெற்றுக் காசோலைகளில் நீ காட்டிய இடமெல்லாம் கையெழுத்து போட வைத்தாய்.. நன்றி.
வேலைக்கே சென்றிராத... உழைப்பே தெரியாத.. உனது மகன்களின் மது, போதை வஸ்து சுகத்துக்காக என்னை தவறாகப் பயன்படுத்தினாய். அதற்கு ஒரு நன்றி. உனது முடிவுகளை நான் புறக்கணித்தபோது என்னை சொந்த வீட்டிக்குள்ளேயே நெருக்கடிக்கு ஆளாக்கிய உனக்கு நன்றி.
நான் உன்னிடம் சண்டை போட்டு பிரியும் வரை எனக்கு திருமணம் செய்து வைக்காமல் இருந்தாய்.. அதற்காக மிகப் பெரிய நன்றி. எனது கணவருக்குத் தொடர்ந்து தொந்தரவு கொடுத்து எனது குடும்ப அமைதிக்குப் பாதகம் செய்தாய்.. அதற்கு நன்றி. ஒரு தாய் எப்படியெல்லாம் இருக்கக் கூடாது என்பதற்கு எனக்கு உதாரணமாக இருந்தாய்.. அதற்கு ஒரு நன்றி.
கடைசியாக என் மீது போலியான புகார்களை அடுக்கிக் கொண்டிருக்கிறாய். அதற்கும் நன்றியே. ஏனெனில் தெரிந்தோ தெரியாமலோ நீ என்னை ஒரு மவுனக் குழந்தையில் இருந்து போராளியாக, முதிர்ச்சியான பார்வை கொண்டவராக உருவாக்கி இருக்கிறாய். உன்னால்தான் நான் துணிச்சலான தைரியமான பெண்ணாக இருக்கிறேன். இந்த ஒரு காரணத்திற்காக நான் எப்போதுமே உன்னை நேசிப்பேன்.
ஒரு நாள் உங்கள் மமதையிலிருந்து விடுபட்டு, என்னை நினைத்துப் பெருமை கொள்வாய்''.
இவ்வாறு சங்கீதா தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT