Last Updated : 02 Apr, 2019 09:17 AM

 

Published : 02 Apr 2019 09:17 AM
Last Updated : 02 Apr 2019 09:17 AM

முள்ளும் மலரும்- அப்பவே அப்படி கதை!

நாவலைப் படமாக்குகிற ரசாயன வித்தை, முள்ளின் மேல் நடப்பது போன்றது. அதை பூவில் நடப்பது போல், மாற்றி, ‘ப்பூ...’ என ஊதித்தள்ளியவர் இயக்குநர் மகேந்திரன். 1978ம் வருடம் வெளிவந்தது இவரின் முதல் படமான முள்ளும் மலரும்.

‘நீ நடிச்சதுலயே உனக்கு ரொம்ப ரொம்பப் பிடிச்ச படம் எது?’ என்று குருநாதர் கே.பாலசந்தர் கேட்க, ஒருநிமிடம் கூட யோசிக்காமல், தயங்காமல், சபை நாகரீகமென்பதையெல்லாம் பார்க்காமல், தனக்கே உரிய வேகத்துடன் ஸ்டைலாகச் சொன்னார் ரஜினி... ‘முள்ளும் மலரும்’ என்று!

முள்ளும் மலரும். அதாவது முள், மலர் என இரண்டு குணங்கள் கொண்டது என்றும் சொல்லலாம். முள்ளும் மலரும். அதாவது முள்ளானது ஒருகட்டதில் மலர்ந்துவிடுகிறது என்றும் அர்த்தம்.

உமாசந்திரன் எவ்வளவு கதைகள் எழுதியிருக்கிறார் என்று நிறையபேருக்குத் தெரியாது. ஆனால், முள்ளும் மலரும் கதையை நாவலாக எழுதி, அது சினிமாவாகவும் எடுக்கப்பட்டதில், அவரின் பெயரும் எழுத்து உள்ளவரையும் இருக்கும்; சொல்லப்பட்டுக் கொண்டே இருக்கும் என்பது உறுதி.

 அவள் அப்படித்தான், ஆயிரம் ஜென்மங்கள், இளமை ஊஞ்சலாடுகிறது, இறைவன் கொடுத்த வரம், என் கேள்விக்கு என்ன பதில், சங்கர் சலீம் சைமன், சதுரங்கம், தப்புத்தாளங்கள், தாய்மீது சத்தியம், ப்ரியா, பைரவி, மாங்குடி மைனர், வணக்கத்துக்குரிய காதலியே, ஜஸ்டிஸ் கோபிநாத்... போதாக்குறைக்கு இன்ஸ்பெக்டர் ரஜினி, ரவுடி ரஜினி என்று மொழிமாற்றுப் படங்கள் என வரிசையாய் அந்த வருடம் ரஜினிக்கு ஏகப்பட்ட படங்கள் வந்தாலும், மகேந்திரனின் முள்ளும் மலரும்... ரஜினியின் கிரீடத்தில், அழகிய இறகென சிறகாய் உட்கார்ந்துகொண்டது.

மகேந்திரன் யதார்த்த மனிதர்களின் நாயகன். அதனால்தான் அத்தனை யதார்த்தமான காளி கதாபாத்திரத்தின் இயல்பு கெடாமல் ரஜினியைத் தேர்வு செய்து, மிகச்சிறப்பாகவும் நடிக்கவும் வைத்திருப்பார்.

மைசூர் பக்கம் உள்ள அந்த லொகேஷனையும் நம்மூர்க் கோப ஈகோ பாச அன்புகளையும் மிக்ஸியில் போட்ட திரைக்கதையாய்த் தந்திருப்பதில் இருக்கிறது, மகேந்திரனுக்கும் அந்த நாவலுக்குமான பிணைப்பு. காளி நல்லவன்தான். ஆனால் அவனின் செயல்களைத் தள்ளிநின்றுப் பார்ப்பவர்களுக்கு, கெட்டவனாகத்தான் தெரிவான். சாதாரணமாகச் செய்யும் நல்ல கெட்ட விஷயங்கள் எல்லாமே அதிகாரி சரத்பாபுவுக்கு, அவ்வளவு நல்லதாகப்படவில்லை. முட்டிக்கொண்டே இருக்கிறார்கள் இருவரும்.

அங்கே, காளியும் அவனின் தங்கை வள்ளி ஷோபாவும் அப்படியொரு ஒட்டுதலுடன் இருக்கிறார்கள். ஷோபாவின் பார்வையும் அந்த வெள்ளந்திக்குரலும் சிலசமயங்களில் பேசுகிற பெரியமனுஷித்தனமும் தடக்கென்று மன சோபாவில் கம்பீரமாக ஷோபாவை உட்காரவைத்துவிடுகின்றன.

படாபட் ஜெயலட்சுமி நடித்த படங்களை எப்போது பார்த்தாலும், ‘பாவி மக, இப்படி அநியாயமா சாவைத் தேர்ந்தெடுத்துப் போய்ச்சேர்ந்துட்டாளே’ என்று துக்கம் தொண்டையை அடைக்கும். அப்படியொரு நிறைவான நடிகை அவர். இங்கே, காளி, வள்ளி கதாபாத்திர ராஜாங்கத்திற்கு மத்தியிலும் தன் முத்திரையை ஆங்காங்கே, பூ தூவுவது மாதிரி தூவிச் சென்றிருப்பார். ’நித்தம் நித்தம் நெல்லுச்சோறு’ பாட்டுக்கு அவரின் ரியாக்‌ஷன் ஒவ்வொன்றும் கல்யாண சமையல் சாதம்.

மளிகைக் கடை வெண்ணிற ஆடை மூர்த்தியின் கள்ள உறவு, சாமிக்கண்ணுவின் அப்பாவித்தனம், சரத்பாபுவின் நேர்மை, அந்த மலையும் மேடுபள்ளங்களும் செடிகொடிகளும் என மிகக்குறைந்த கதாபாத்திரங்கள்தான். இவை அத்தனைக்கும் கனம் சேர்ப்பதாகவும் இலகுவாக்குவதாகவும் மென்மை கூட்டுவதாகவும் மனங்களை நம் கண்ணுக்கு எதிரே காது வழியே காட்டுவதற்காகவும் என மிகப்பெரிய பங்கைச் செலுத்தியிருக்கிறார் இளையராஜா. பாலுமகேந்திராவின் கண்களும் கேமிராவும் உள்ளதை உள்ளபடியே காட்டி, இன்னும் அழகூட்டியிருக்கும்.

’கெட்டபய சார் காளி... ரெண்டு காலு ரெண்டு கையி இல்லாட்டியும் கூட பொழச்சுக்குவான்’ என்பது படம் ரீலிசான சமயத்தில் பஞ்ச் வசனமாகப் பார்க்கப்படவில்லை. ஆனால் படம் வெளியாகி, 40 வருடங்களான நிலையில், இன்றைக்கு இந்த வசனத்தைச் சொல்லாதவர்களே இல்லை.

ரஜினி - ஷோபாவின் உருக்கமான, மனதுக்கு நெருக்கமான தருணங்களிலெல்லாம், பின்னணியில் ஓர் இசையை, கழைக்கூத்தாடிகளின் இசையை, நிரவி, ஓடவிட்டு, நம்மை என்னவோ செய்துவிடுவார் இளையராஜா. ‘அடிப்பெண்ணே...’ பாட்டில் நம்மையும் துள்ளவைப்பார். ஓடவைப்பார். ‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்’ பாட்டில், அந்தக் கூட்டத்தில் நம்மையும் நிற்கவைத்து, ‘போடா பாத்துக்கலாம்’ என்று உறுதியைத் தந்திருப்பார். ‘செந்தாழம்பூவில்...’ பாட்டில், சரத்பாபு, ஷோபா மற்றும் தோழிகளுடன் அந்த ஜீப்பில், நாமும் தொற்றிக்கொண்டு பயணிக்கச் செய்திருப்பார். செம பசியுடன் வயிறாரச் சாப்பிட்டுவிட்டு, கையலம்பி, வெற்றிலைப் பாக்குப் போட்டுக்கொண்டு, ஏப்பம் விட்டபடி தொப்பையைத் தடவுபவர்களுக்குக்கூட, ‘நித்தம் நித்தம் நெல்லுச்சோறு’ பாடல் மூலமாக, மீண்டும் பசியை ஏற்படுத்திவிடுவார். அதுதான் இளையராஜா.

ஒருபானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். மகேந்திரனுக்கு முதல் சோறு பதம் இது. அடுத்த சோறு பதம்... உதிரிப்பூக்கள்.

ஒரே ஊர், ஒரே தெரு, ஒரே டீக்கடை, நான்கைந்து பேர், பாலுமகேந்திரா, இளையராஜா, ரஜினி, ஷோபா... மகேந்திரன் எனும் படைப்பாளிக்கு இவையே போதுமானது! என்னை மீறி என் தங்கச்சி, என்னை விட்டுட்டு வரமாட்டா. வரலை. இதுபோதும் எனக்கு. ’இப்பக் கூட உங்களை எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கலை. நானே சொல்றேன். என் தங்கச்சியை கட்டிக்கிட்டு, சந்தோஷமாப் போங்க. உங்களை இப்பக் கூட பிடிக்கலை எனக்கு’ என கையை இழந்து, தன்மானத்தையும் பாசத்தையும் இழக்காத காளி நெகிழ்ந்தும் மகிழ்ந்தும் சொல்ல... தியேட்டரே கைத்தட்டும். மனசே அன்பில் அடைத்துக்கொள்ளும். அந்த அன்பின் இழைதான்... முள்ளும் மலரும் இன்னும் நமக்குள் படர்ந்திருக்கிற கொடி!

உமாசந்திரனின் முள்ளும்மலரும் நாவலை... மகேந்திரனின் முள்ளும்மலரும் சினிமாவாக்கியதுதான், அந்த மகாபடைப்பாளியின் மெகா சாதனை!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x