Published : 16 Apr 2019 12:10 PM
Last Updated : 16 Apr 2019 12:10 PM
அற்புதமான வண்ணக் கலவையால் தீட்டப்பட்ட ஓவியங்களை, திருத்தமாகச் செதுக்கப்பட்ட சிற்பங்களை சக மனநல மருத்துவர்களிடம் காட்டுகிறார் டாக்டர் நீஸீ. அவை அனைத்தும் மனப்பிறழ்வு, பைபோலார் போன்ற தீவிரமான மனநோய்க்கு ஆட்பட்டவர்களால் வரையப்பட்டவை, செதுக்கப்பட்டவை.
மனநோயாளிகளைக் கட்டிப்போட்டுக் கொடூரமாக மின்னதிர்ச்சி அளிக்கும் முறையை 1940-களில் பின்பற்றி வந்த பிரேசில் நாட்டு மனநல மருத்துவமனை ஒன்றில் நிகழ்ந்த சம்பவம் இது. இந்த மருத்துவமனைதான், ‘நீஸீ: தி ஹார்ட் ஆஃப் மேட்னஸ்’ (Nise: The Heart of Madness) படத்தின் கதைக் களம்.
கலையும் மனிதநேயமும்
1940களில் அமெரிக்கா, ரஷ்யா, பிரான்சு, பிரேசில் ஆகிய நாடுகளின் உளவியல் துறையில் பின்பற்றப்பட்டு வந்த வன்முறை நிறைந்த மருத்துவ சிகிச்சை முறையால் பரிதாபமாக உயிரிழந்தவர்கள் அல்லது நடைபிணமாகிப் போனவர்கள் பலருண்டு. வன்முறை சிகிச்சையாகாது என்று துணிச்சலாகக் குரலெழுப்பிக் கலை மூலமாகவும் மனிதநேயத்தின் ஊடாகவும் மனநோயைக் குணப்படுத்திக் காட்டியவர் நீஸீ.
ஆண்கள் ஆதிக்கம் செலுத்திய உளவியல் துறையில் மெல்லக் கால்பதித்துப் பின்னர் தடம் பதித்த முதல் பிரேசிலியப் பெண் இவர். அவரைப் பற்றிய பையோபிக்தான் ‘நீஸீ: தி ஹார்ட் ஆஃப் மேட்னஸ்’. 1940-களில் இருந்த மனநல மருத்துவ உலகையும் அத்துறையில் அமைதிப் புரட்சி ஏற்படுத்திய பெண் உளவியலாளர் நீஸீயையும் 2015-ல் கண்முன் கொண்டு வந்து நிறுத்திய இந்தப் படம் நான்கு சர்வதேச விருதுகளை வென்றது.
இந்த பிரேசிலியப் படத்துடன் ரஷ்யப் படமான 'தி ஸ்பேஸ்வாக்கர்' (The Spacewalker), சீனப் படமான ‘டிக் டாக்’ (Tik Tok), தென் ஆப்பிரிக்கப் படமான 'தி வுண்ட்' (The Wound), இந்தியப் படமான ‘96’ ஆகியவற்றை இந்தோ சினி அப்ரிசியேஷன் ஃபவுண்டேஷன் திரைப்படச் சங்கம் திரையிடவிருக்கிறது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய பிரிக்ஸ் நாடுகளைக் கொண்டாடும் விதமாக ரஷ்ய அறிவியல் மற்றும் கலாச்சார மையத்துடன் இணைந்து ‘பிரிக்ஸ் திரை விழா’வை திரைப்படச் சங்கம் நடத்தவிருக்கிறது. சென்னை ரஷ்ய கலாச்சார மையத் திரையரங்கில் ஏப்ரல் 15 முதல் 17வரை மாலைப் பொழுதுகளில் இந்தப் படங்களைக் காணலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT