Last Updated : 07 Apr, 2019 08:42 PM

 

Published : 07 Apr 2019 08:42 PM
Last Updated : 07 Apr 2019 08:42 PM

கமலுக்கு ‘சகலகலா வல்லவன்’; ரஜினிக்கு ‘முரட்டுக்காளை: எஸ்.பி.முத்துராமன் பிறந்தநாள்

கமலுக்கு ‘சகலகலாவல்லவன்’; ரஜினிக்கு ‘முரட்டுக்காளை; எஸ்.பி.முத்துராமனின் பிறந்தநாள்

இன்று எஸ்.பி.எம். பிறந்தநாள் ’அவர் அப்படிப்பட்ட படங்களை எடுப்பதில் வல்லவர்’ என்று சில இயக்குநர்களைச் சொல்லுவார்கள். ‘இவர் இப்பேர்ப்பட்ட படங்களை எடுப்பதில் கெட்டிக்காரர்’ என்று வேறு சில இயக்குநர்களைச் சொல்லுவார்கள். அதாவது கமர்ஷியல் படங்களாகட்டும், கருத்துள்ள படங்களாகட்டும்... எதுவாக இருந்தாலும் எடுப்பதில் வல்லவர் என்று பேரெடுத்த இயக்குநர்கள் இங்கே குறைவுதான். அந்தக் குறைவிலும் நிறைவுக்கு உரியவராகத் திகழ்பவர்... இயக்குநர் எஸ்.பி.முத்துராமன்.

காரைக்குடிதான் பூர்வீகம். ’களத்தூர் கண்ணம்மா’. கமலின் முதல் படம். ஒருவகையில், ஏவிஎம் நிறுவனத்துக்குள் பணியாற்ற நுழைந்த எஸ்.பி.முத்துராமனுக்கும் இதுவே முதல் படம்.

புரொடக்‌ஷன், எடிட்டிங், உதவி டைரக்டர் என்றெல்லாம் எண்ணற்ற படங்களில் பணியாற்றினார். பட்ஜெட்டுக்குள் படமெடுப்பது எப்படி, பெரிய பட்ஜெட் படங்களில் பிரமாண்டம் காட்டுவது எவ்விதம், கதை சொல்லும் பாணி எவ்வாறு இருக்கவேண்டும், நடிகர்களின் தேர்வில் எப்படியெல்லாம் கவனம் செலுத்தவேண்டும் என்பதைக் கரைத்துக் குடித்தார் எஸ்.பி.முத்துராமன்.

கனிந்து மலர்ந்த முத்துராமன், முதல் படத்தை இயக்கவும் செய்தார். அது... ‘கனிமுத்துபாப்பா’. அன்றைக்கு, முதல் படத்தில் கமல் எனும் சிறுவனைத் தூக்கிக் கொண்டு பழகிய எஸ்.பி.முத்துராமன், தன் முதல் படத்திலேயே ஓர் குழந்தை நட்சத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துத்தான் படத்தை இயக்கினார்.

அடுத்தடுத்து படங்களை இயக்கிக் கொண்டே இருந்தார். பெத்த மனம் பித்து, காசியாத்திரை, தெய்வக்குழந்தைகள், யாருக்கு மாப்பிள்ளை யாரோ, மயங்குகிறாள் ஒரு மாது, துணிவே துணை என வரிசையாக படங்கள். ஏகப்பட்ட படங்கள். முத்துராமன், ஜெய்சங்கர், சிவகுமார் என பலநடிகர்களுடன் பணியாற்றினார்.

ஏவிஎம் நிறுவனத்தின் ஆஸ்தான இயக்குநர் என முதன்முதலில் பெயரெடுத்தவர் இயக்குநர் ஏ.சி.திருலோகசந்தர். அதன்பிறகு அந்த ஆஸ்தானப் பதவியில் இருந்து பணியாற்றியவர் எஸ்.பி.முத்துராமன். புகழும் பெருமையும் மிக்க ஏவிஎம் நிறுவனத்தின் ஆஸ்தான இயக்குநர் என்று கர்வத்தை தலையில் தூக்கிக்கொள்ளாத எளிமைதான், எஸ்.பி.எம்மின் தனித்ததொரு அடையாளம். இயல்பு. நற்குணம்.

அதுமட்டுமா? ரஜினியை வைத்து அதிகப் படங்களை இயக்கியவர் இவரே. இயக்குநர் கே.பாலசந்தருக்குப் பிறகு கமலை வைத்து அதிகப் படங்களை இயக்கியவரும் இவர்தான். அதுமட்டுமா? எந்த இயக்குநருக்கும் கிடைக்காததொரு பெருமையும் கெளரவமும் இவருக்கு உண்டு. கே.பாலசந்தரின் கவிதாலயா நிறுவனத்தில், புரட்சியாகவோ புதுமையாகவோ பாலசந்தர் படம் இயக்குவார்.

நெற்றிக்கண், புதுக்கவிதை,எனக்குள் ஒருவன், குடும்பம் ஒரு கதம்பம், வேலைக்காரன் என ஆக்‌ஷன் ப்ளஸ் வேறுமாதிரியான படங்களென்றால், எஸ்.பி.முத்துராமனைத்தான் இயக்கச் செய்வார் பாலசந்தர். குறிப்பிட்ட பட்ஜெட்டில் படமெடுப்பதில் வல்லவர்.

குறித்த காலத்துக்குள் படத்தை முடிப்பதில் நல்லவர் என சர்டிபிகேட் உண்டு, எஸ்.பி.முத்துராமனுக்கு. ஏவிஎம், கவிதாலயா மட்டுமா? பஞ்சு அருணாசலம் தயாரிப்பு நிறுவனமான பி.ஏ.ஆர்ட் புரொடக்‌ஷன்ளில் ஏகப்பட்ட படங்களை இயக்கியுள்ளார். ஆக, ஏவிஎம், கவிதாலயா, பஞ்சுஅருணாசலம் நிறுவனம் என செல்லப்பிள்ளையாகவே வலம் வந்தார்.

கமலுக்கு ‘சகலகலாவல்லவன்’, ரஜினிக்கு ‘முரட்டுக்காளை’, இந்தப் பக்கம் ‘எங்கேயோ கேட்ட குரல்’, அந்தப் பக்கம் ‘எனக்குள் ஒருவன்’, ரஜினிக்கு ‘புவனா ஒரு கேள்விக்குறி’, கமலுக்கு ‘உயர்ந்த உள்ளம்’, கமலையும் ரஜினியையும் இணைத்து ‘ஆடுபுலிஆட்டம்’, கமலுக்கு கருப்புவெள்ளையில், ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது, மோகம் முப்பது வருஷம் என அதிரிபுதிரி ஹிட்டுகளையும் கொடுத்தார். அடிமனதில் தங்கும் படங்களையும் வழங்கினார்.

ஒவ்வொரு இயக்குநருக்கும் ஒவ்வொருவிதமான ஸ்டைல் இருக்கும். படங்களில், ஏதேனும் சில இடங்களில், அவை எட்டிப்பார்க்கும். அல்லது எட்டிப் பார்க்கவேண்டும் என்பதற்காகவே காட்சிகள் வடிவமைக்கப்பட்டிருக்கும். எஸ்.பி.முத்துராமனின் ஸ்டைல்... தனக்கென எந்தவொரு முத்திரையும் ஸ்டைலும் இல்லாமல், கதையினூடே போய் காட்சிகளை கலகலப்பாக்குவதும் கனமாக்குவதும்தான் அவரின் ஸ்டைல்.

அவை யாருடைய நாவலாக இருந்தாலும் சரி, எவருடைய கதையாக இருந்தாலும் சரி... தெளிந்த நீரோடையைப் போல் படத்தை கனகச்சிதமாகப் பண்ணிவிடுவதில் கில்லாடி என்பதுதான் எஸ்பிஎம்மின் ஸ்டைல்! இரண்டு துருவங்களை வைத்து எக்கச்சக்க படங்களை இயக்கியிருந்தாலும் எளிமைதான் இவரின் அடையாளம். பகட்டாகவும் இருக்கமாட்டார். பந்தாவும் பண்ணமாட்டார்.

காலையில் கமல், மாலையில் ரஜினி, இரவில் சிவகுமார் என பரபரப்புடன் எண்பதுக்கும் மேற்பட்ட படங்களைக் கொடுத்த இயக்குநர் எஸ்.பி.முத்துராமனுக்கு இன்று ஏப்ரல் 7ம் தேதி பிறந்தநாள். அவர் நீண்ட ஆயுளுடனும் பேரமைதியுடனும் இனிதே வாழ, கமல், ரஜினி ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ் சினிமாவின் ரசிகர்கள் எல்லோரும் அவரை வாழ்த்துவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x