Published : 16 Apr 2019 12:16 PM
Last Updated : 16 Apr 2019 12:16 PM
அரசியல் மாற்றம் காண சரியான வழி தொடர்பாக இயக்குநர் சேரன் யோசனை தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரம் இன்று (ஏப்ரல் 16) மாலையுடன் முடிவடைகிறது. ஏப்ரல் 18-ம் தேதி தமிழகத்தில் வாக்குப் பதிவு நடைபெறவுள்ளது. இதனால் அரசியல் கட்சித் தலைவர்கள் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சமீபகாலமாக அரசியல் தலைவர்களின் பிரச்சாரப் பேச்சு குறித்து தன்னுடைய கருத்துகளை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் இயக்குநர் சேரன். இந்நிலையில் தற்போது வசிக்கும் இடத்தை விட்டு, வேறு ஊர்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தொடர்பாக தனது அதிருப்தியைத் தெரிவித்துள்ளார் சேரன்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டி கொதிப்படையச் செய்து வாக்கு சேகரிப்பதும் ஒருவகையில் தவறான அணுகுமுறைதான். பேச்சிலும் கவர்ச்சியிலும் மயங்கித்தான் 50 வருடங்கள்... நிதானமாக ஒவ்வொரு தலைவரின் உரை, இருக்கும் பிரச்சினைகள், அவர்கள் எடுத்து வைக்கும் தீர்வு என அலசுங்கள். அதுவே சரியான மாற்றம் காண வழி.
வசிக்கும் இடத்தை விட்டு வேறு இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்களை முதலில் போட்டியிடும் தொகுதிக்கு வந்து வசிக்கச் சொல்லுங்கள். மக்களின் பிரச்சினைகளை உடனடியாகப் பார்க்க, தீர்க்க மக்கள் இலகுவாக அணுக வசதியாக இருக்கும். மக்களோடு வாழாத வேட்பாளர்களுக்கு அந்தத் தொகுதி பிரச்சினை வெறும் செய்திதானே'' என்று சேரன் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT