Published : 19 Apr 2019 06:44 PM
Last Updated : 19 Apr 2019 06:44 PM
ஓட்டு போடுவதற்கு காசு வாங்குவது குற்றம் என்றால் ஓட்டு போட விரும்புகிறவனிடம் காசு பிடுங்குவதும் குற்றமே என்று 'நீயா நானா' கோபிநாத் கடுமையாக சாடியுள்ளார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு நேற்று (ஏப்ரல் 18) பொது விடுமுறை விடப்பட்டிருந்தது. இன்று (ஏப்ரல் 19) புனித வெள்ளி மற்றும் சனி, ஞாயிறு என தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் பலரும் ஊருக்குச் சென்றார்கள்.
ஏப்ரல் 17-ம் தேதி இரவு பலரும் வாக்களிக்க ஊருக்குச் செல்ல முடியாமல் தவித்தனர். போதிய பேருந்து வசதிகள் செய்யப்படவில்லை என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினர். அதுமட்டுமன்றி, போராட்டத்திலும் ஈடுபட்டதால் சிறியளவில் தடியடியும் நடத்தப்பட்டது.
இதனை தனது ட்விட்டர் பதிவில் கடுமையாக விமர்சித்திருக்கிறார் விஜய் தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளர் கோபிநாத். இது தொடர்பாக அவர் வெளியிட்ட கடிதத்தில் கூறியிப்பதாவது:
இந்தத் தேர்தலைப் பொறுத்தவரை பாராட்டுதலுக்கும் மரியாதைக்கும் உரியவர்கள் இளம் தலைமுறை வாக்காளர்கள் தான். நிறைய இளைஞர்கள் கிடைத்த ஒரு நாள் விடுமுறையில் இரண்டு மூன்று மடங்கு அதிகமான பணம் கொடுத்து பேருந்துகளின் மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்து தங்கள் வாக்குகளை செலுத்தி இருக்கிறார்கள்.
விஐபிக்கள் வரிசையில் நின்று வாக்களிப்பதை பெரிய விஷயம் போல் பார்க்கும் நாம் உண்மையிலேயே மனமுவந்து பாராட்ட வேண்டியது இந்த இளைஞர்களைத்தான். தவறாமல் வாக்களியுங்கள் என்று சொன்ன நாம், வாக்களிக்க ஆசைப்பட்ட இந்த இளம் தலைமுறைக்கு நியாயமான வசதிகளை செய்து கொடுத்தோமா என்றும் யோசிக்க வேண்டி இருக்கிறது.
அது உங்கள் ஜனநாயக கடமை, நீங்கள் கஷ்டப்பட்டாவது நிறைவேற்ற வேண்டும் என்று ஒற்றை வரியில் சொல்லிவிட்டுப் போகலாம். ஆனால் அதற்கான சூழலை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது அரசு; தேர்தல் ஆணையம் மற்றும் சமூகத்தின் கடமை குறைந்தபட்சம், பேருந்து கட்டணம் அதிகமாக வசூலிக்கக்கூடாது என்று முன்கூட்டியே முறைப்படுத்தி இருக்கலாம். இது எதையும் செய்யாமல் வாக்களியுங்கள் என்று வார்த்தையோடு நிறுத்துவது எப்படி சரியாக இருக்க முடியும்?
ஓட்டு போடுவதற்கு காசு வாங்குவது குற்றம் என்றால் ஓட்டு போட விரும்புகிறவனிடம் காசு பிடுங்குவதும் குற்றம்தான்!
இவ்வாறு கோபிநாத் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT