Published : 05 Sep 2014 05:06 PM
Last Updated : 05 Sep 2014 05:06 PM
சின்னத்திரையின் முன்னணித் தொகுப்பாளர்களில் ஒருவர் மோனிகா ஹரிராவ். நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதுடன் தொடர்களிலும் நடித்துவரும் அவரை ‘தெய்வம் தந்த வீடு’ தொடரின் படப்பிடிப்பின் இடைவேளையில் சந்தித்தோம்.
தொகுப்பாளினியாக அறிமுகமான நீங்கள் இப்போது முழுக்க ஒரு நடிகையாக மாறிவிட்டீர்களே?
தொடர்ந்து சின்னத்திரை தொடர்களில் நடித்தாலும் நான் இன்னும் ஒரு தொகுப்பாளினிதான். ரசிகர்களும் என்னை தொகுப்பாளினி மோனிகாவாகத்தான் பார்க்கிறார்கள். நான் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்க ஆரம்பித்து 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டது. 2008-ல் தொடர்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. முதல் தொடர் ‘காமெடி காலனி’, அடுத்து ‘செந்தூரப்பூவே’ இப்போது ‘தெய்வம் தந்த வீடு’ சீரியல் நடிப்பும் ஒரு திரில்லான அனுபவமாகப் போகிறது.
டிவி தொடர்களின் பாதை இப்போது எப்படி போய்க்கொண்டு இருக்கிறது?
டிவி தொடர்களில் ஒரு காலகட்டத்தில் தரம் குறைந்த காட்சிகள் இருந்தன. இப்போது அப்படி இல்லை. பெண்களின் பிரச்சினைகளை பேசவும், அதற்கு தீர்வு சொல்லவும் பல தொடர்கள் வந்துவிட்டது. இதை ஆரோக்கியமான விஷயமாக நான் நினைக்கிறேன். அதோடு சினிமா அளவுக்கு உழைப்பைக் கொடுத்து சீரியல்களை எடுக்கத் தொடங்கிவிட்டார்கள். இதை நல்ல வளர்ச்சியாக பார்க்க வேண்டும்.
உங்களுக்கு பிடித்த கதாபாத்திரத்தை எப்படி தேர்வு செய்கிறீர்கள்?
நெகடிவ், பாசிடிவ் என்று எந்த அடையாளமும் வைத்துக்கொள்ள ஆசை இல்லை. நல்ல கதாபாத்திரம் அமைந்தால் உடனே சம்மதிப்பேன். இப்போது ‘தெய்வம் தந்த வீடு’ தொடரில் நான் வில்லிக்கும், நல்ல கேரக்டருக்கும் இடைப்பட்ட வேடத்தில் நடிக்கிறேன். எனக்கு மிகவும் பிடித்த கதாபாத்திரம் இது.
மீண்டும் தொகுப்பாளினியாக களம் இறங்கியிருக்கிறீர்களே?
ஆமாம் வேந்தர் தொலைக்காட்சியில் ‘சா பூ த்ரீ’ என்ற குழந்தைகளுக்கான நிகழ்ச்சியை நடத்த தொடங்கியிருக்கேன். பல ஆண்டுகள் கழித்து மீண்டும் பழைய தொகுப்பாளினி மோனிகாவாக வலம் வரத்தொடங்கியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. தொகுப்பாளினியாக இருப்பதில் நிறைய சுதந்திரம் இருக்கிறது. ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும்போது அந்த நேரம் நாம்தான் ராணி. மீண்டும் அந்த வேடத்தை போட்டுக்கொண்டதில் எல்லை இல்லாத ஆனந்தம்.
உங்களுடையது காதல் திருமணமாச்சே. இல்லற வாழ்க்கை எப்படி போகிறது?
கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் கடந்துவிட்டது. கணவர் ஷாம் மேத்யூ விரைவில் சினிமா இயக்குந ராகப் போகிறார். அவருடைய உறுதுணையால்தான் என்னால் இப்போதுகூட நடிப்பை தொடர முடிகிறது. நான் எப்பவும் இழக்க விரும்பாத என் நண்பரும் அவர்தான்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT