Published : 24 Apr 2019 03:25 PM
Last Updated : 24 Apr 2019 03:25 PM
விஜய்க்கு வில்லனாக ஷாருக்கான் நடிக்கவுள்ளார் என்று இந்தி இணையதளம் ஒன்று செய்தி வெளியிட, அது மீண்டும் உலவத் தொடங்கியுள்ளது.
அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படத்தின் படப்பிடிப்பு தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏஜிஎஸ் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது. இதில் பெண்கள் ஃபுட்பால் அணியின் பயிற்சியாளராக விஜய் நடித்து வருகிறார்.
இப்படத்தில் ஷாருக்கான் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. ஆனால், படக்குழுவினரோ இதனை மறுத்தார்கள். திடீரென்று சென்னையில் நடைபெற்ற சென்னை மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஷாருக்கானுக்கு அருகில் அட்லீ அமர்ந்து பார்த்தார்.
மேலும், அட்லீயின் அலுவலகத்துக்கும் ஷாருக்கான் சென்றார். இதனால் மீண்டும் விஜய் படத்தில் ஷாருக்கான் நடிக்கவுள்ளார் என்று செய்திகள் வெளியாகின. இதற்கு "விஜய் படத்தை முடித்துவிட்டு, ஷாருக்கான் நடிக்கும் இந்திப் படத்தை அட்லீ இயக்கவுள்ளார். இதற்காகவே சந்தித்தார்கள்" என்று விளக்கம் அளிக்கப்பட்டது. இதனால் ஷாருக்கான் தொடர்பான வதந்திகளைத் தொடர்ந்து, தற்போது விஜய்க்கு ஷாருக்கான் வில்லனாக நடிக்கவுள்ளார் என்று முன்னணி இந்தி இணையதளம் செய்தி வெளியிட்டது.
மேலும், இதை ஒரு TWITTER MOMENTS-ஆகவும் உருவாக்கினார்கள். இதனை TWITTER MOMENTS INDIA இணையதளமும் ட்வீட் செய்தது. இதனால், மீண்டும் இந்தச் செய்தி பரவி வருகிறது.
இது தொடர்பாக படக்குழுவினரிடம் கேட்ட போது, "இரண்டு முறை இம்மாதிரி செய்திகள் வெளியாகும் போது விளக்கம் அளித்தோம். ஒவ்வொரு முறையும் இந்தச் செய்தி பொய் என்று சொல்லிக் கொண்டே இருக்க இயலுமா?. விஜய் படத்தில் ஷாருக்கான் நடிக்கவில்லை என்பதே உண்மை" என்று முடித்துக் கொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT