Published : 01 Apr 2019 11:46 AM
Last Updated : 01 Apr 2019 11:46 AM
‘சிவாஜி நடிப்பை குறை சொன்னார் நாகேஷ். ஆனால் இதைக் கேட்டுவிட்டு சிவாஜி என்ன சொன்னார் தெரியுமா?’ என்று சித்ரா லட்சுமணன் விளக்கமளித்துப் பேசினார்.
சிவாஜி, வாணிஸ்ரீ நடித்து 1972ம் ஆண்டு வெளியான படம் ‘வசந்த மாளிகை.’ 47 வருடங்களுக்குப் பிறகு டிஜிட்டலில் மாற்றப்பட்டு வெளியாக உள்ளது. திரைப்பட கதாசிரியரும் தயாரிப்பாளரும் இயக்குநருமான வி.சி.குகநாதன், இந்தப் படத்தை விநியோகம் செய்கிறார்.
இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது. விழாவில் தயாரிப்பாளரும் நடிகருமான சித்ரா லட்சுமணன் பேசியதாவது:
’வசந்த மாளிகை’ திரைப்படத்தில் நடிக்கும் போது சிவாஜிகணேசனுக்கு 45 வயது. அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட மகா கலைஞன் சிவாஜிகணேசன். இவரின் பல படங்களை இந்தியில் ரீமேக் செய்திருக்கிறார்கள். அப்போது இந்தி நடிகர்கள், ‘என்னால நடிக்கமுடியாது’ என்று வெளிப்படையாகவே சொல்லியிருக்கிறார்கள். ‘நவராத்திரி’ மாதிரியான படத்தில், ஒன்பது விதமான கேரக்டர்களில் சிவாஜியைத் தவிர வேறு யார் நடிக்கமுடியும்?
அதேபோல், எந்த நடிகரிடமும் பார்த்திடாத பண்பும் குணமும் சிவாஜிக்கு உண்டு. சிவாஜியின் மறக்கமுடியாத படங்களில் ‘கெளரவம்’ படமும் ஒன்று. அந்தப் படத்தில், கோர்ட் சீன். அதில், ஆங்கிலம் கலந்து வசனம் பேசுவார் சிவாஜி. அந்தக் காட்சியின் வசனங்களைப் பேசி நடித்துவிட்டு வெளியே வந்தார்.
எல்லோரும் சிவாஜியிடம் நடிப்பைப் பாராட்டிச் சொன்னார்கள். ஆனால் நாகேஷ் மட்டும் எதுவும் சொல்லவில்லை. உடனே சிவாஜி, ‘என்னடா, எல்லாரும் நடிப்பு பத்தி சொல்றாங்க. நீ ஒண்ணுமே சொல்லலியே’ என்று கேட்டார்.
‘மன்னிக்கணும். இந்த சீன்ல உங்க நடிப்பு சுமார்தான்’ என்றார் நாகேஷ் சட்டென்று. சுற்றியிருந்தவர்கள் இதைக்கேட்டு அதிர்ந்துபோனார்கள். ‘வழக்கமா இங்கிலீஷ் டயலாக்லாம் நல்லாப் பேசுவீங்க. ஆனா இப்ப சரியில்ல. இதோ... இவனும் அப்படித்தான் நினைக்கிறான்’ என்று அருகில் ஒய்.ஜி.மகேந்திரனையும் கோர்த்துவிட்டார் நாகேஷ். மகேந்திரனுக்கு, அதுதான் முதல் படம்.
எல்லோரும் சிவாஜி என்ன சொல்லுவாரோ ஏது சொல்லுவாரோ என்று சிவாஜியையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். ‘நம்ம இங்கிலீஷ் அவ்ளோதான். நானென்ன மகேந்திரன் அம்மா நடத்துற ஸ்கூல்ல படிச்சேனா என்ன? எனக்குத்தான் சீட் கொடுத்து சேர்த்துக்குவாங்களா?’ என்று கிண்டலாகச் சொல்லிவிட்டு நேராக அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் வின்சென்ட்டிடம் சென்றார். ‘வின்சென்ட், இன்னொரு டேக் போயிடலாம்’ என்றார். மீண்டும் அந்தக் காட்சியில் நடித்தார் சிவாஜி. வசனம், நடிப்பு, முக்கியமாக ஆங்கில உச்சரிப்பு எல்லாமே அமர்க்களமாக வந்திருந்தது. நாகேஷ் ஓடிவந்து சிவாஜியைக் கட்டிக்கொண்டார். ‘அதான் சிவாஜிண்ணா’ என்று நெகிழ்ந்துபோனார் நாகேஷ்.
அதே மற்ற நடிகர்களாக இருந்தால், கோபப்பட்டிருப்பார்கள். ஆனால் சிவாஜி அப்படி கோபப்படவில்லை. முன்பை விட சிறப்பாக நடித்துக்கொடுத்தார். அதுதான் சிவாஜி.
இவ்வாறு சித்ரா லட்சுமணன் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT